விஜய் கண்டிப்பா ஜெயிப்பார்! டென்ஷனான தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்!
விஜயின் அரசியல் பயணம் குறித்து தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டு வந்ததால் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சற்று கோபமடைந்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி வரும் 2026-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவருடைய அரசியல் செயல்பாடுகள் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, அவர் த.வெ.க மாநாட்டில் பேசியது முதல் சமீபத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது வரை அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக மாறியது.
இந்த சூழலில், இயக்குனரும் த.வெ.க தலைவர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று சென்னை விமான நிலயத்திற்கு வந்தபோது செய்தியாளர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர். ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்த அவர் நான் இங்கு வந்த விஷயம் வேற எனவே அதனைப்பற்றி கேட்காதீர்கள் என பதில் அளித்து சென்றார்.
முதல் கேள்வியாக அவரிடம் செய்தியாளர்கள் விஜயின் அரசியல் பாதை பற்றி உங்களுடைய கருத்து என்ன? என கேட்டனர். அதற்கு பதில் அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர் “விஜய் அரசியல் பயணம் நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக அவர் தேர்தலில் வெற்றிபெறுவார்” என முதலில் மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து அடுத்ததாக செய்தியாளர்கள் ” விசிகவுடன் த.வெக கூட்டணி அமைக்குமா? என கேட்டனர். இந்த கேள்வியை கேட்டவுடன் பதில் சொல்லாமல் எஸ்.ஏ.சந்திரசேகர் சிறிது தூரம் நடந்து சென்றார். இருப்பினும் செய்தியாளர்கள் அவரை மறைத்து கேள்விகளுக்கு மேல் கேள்வி கேட்டதால் ஒரு கட்டத்தில் கடுப்பான அவர் “நான் இங்கு வந்த நோக்கம் வேறு எனவே அரசியல் பற்றி கேட்காமல் வேறு எதையாவது பற்றி கேளுங்கள் நான் அதற்கு பதில் சொல்கிறேன்” என்றார்.
இருப்பினும் தொடர்ச்சியாக அவரை தொடர்ந்து கொண்டே செய்தியாளர்கள் விஜயின் அரசியல் குறித்து கேள்வியை கேட்டதால் பதில் சொல்லாமல் கோபத்துடன் வழியை விடுங்கள்..வழியை விடுங்கள் என கூறிவிட்டு சென்றார்.