மூட்டை தூக்கும் பள்ளி மாணவனுக்கு உதவிய விஜய்: வைரல் வீடியோவால் வீடு தேடி வந்த உதவிகள்.!
சென்னை : குடும்ப சூழ்நிலை காரணமாக மூடை தூக்கும் வேலைக்கு செல்வதாக மாணவன் கூறிய வீடியோ வைரலான நிலையில், தவெக தலைவர் விஜய் அவருக்கு தேவையான உதவிகளை செய்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நியா நானா’ நிகழ்ச்சியில் சமீபத்தில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் மாணவ, மாணவிகளின் தங்களுடைய வாழ்வில் சந்திக்கும் சிரமங்கள் மற்றும் வலிகள் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, நிகழ்ச்சியில் கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு மாணவன் தனது அம்மாவுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர் பேசிய விஷயம் இந்த வயதில் இப்படி உழைக்கிறாரே..என்கிற வகையில் நாம் அனைவரையுமே யோசிக்க வைத்தது. அது மட்டுமின்றி, அவர் தனது அம்மா மீது வைத்த அன்பும் அவர் பேசியதில் தெரிய வந்தது என்றே சொல்லலாம். அப்படி அவர் நிகழ்ச்சியில் என்ன பேசினார் என்றால் “என்னுடை குடும்பம் கஷ்டப்படுவதன் காரணமாக நான் படித்துக்கொண்டே மூடைதூக்கும் வேலைக்குச் சென்று வருகிறேன்.
குறைந்தது ஒரு நாளைக்கு நான் 5 மணி நேரம் வேலை செய்வேன். இரவில் சில நேரங்களில் பேருந்து இல்லையென்றால் வீட்டிற்குக் கிட்டத்தட்ட ஒரு 3 கி.மீ., நடந்தே செல்வேன். இவ்வளவு கஷ்டப்படுவது என்னுடைய அம்மாவை நான் நல்ல வீடு கட்டி நன்றாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகத் தான்” எனவும் உருக்கமாக அந்த மாணவன் பேசினார். தொடர்ந்து பேசிய அவர் ” என்னுடைய அம்மா இன்னும் கீழே தான் படுத்துத் தூங்கிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு நான் ஒரு பெட் வாங்கி கொடுக்கவேண்டும் என பேசி இருந்தார்.
தமன் உதவி
மாணவன் பேசிய வீடியோ வெளியாகி வைரலாக பரவியதைத் தொடங்கியவுடன் இசையமைப்பாளர் தமன் வீடியோவை பார்த்துவிட்டு கண்கலங்கி இந்த மாணவனுக்கு எதாவது உதவி செய்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு தனது சமூக வலைதள பக்கத்தில் ” இந்த மாணவன் அவனுடைய அம்மா மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார். நான் இவனுக்கு ஒரு பைக் வாங்கிக்கொடுக்க விரும்புகிறேன்” எனக் கூறியிருந்தார். பைக் வாங்கி கொடுத்தால் மாணவன் வேலையை முடித்துவிட்டு சீக்கிரமாகவே வீட்டிற்குச் செல்வார் என்பதால் அவருக்கு தமன் பைக் வாங்கி கொடுப்பதாகக் கூறியிருந்தார்.
விஜய் செய்த உதவி
தமனை தொடர்ந்து வைரலான வீடியோ பார்த்த நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் மாணவருடைய குடும்பத்தினருக்குக் கோவில்பட்டி நிர்வாகிகள் மூலமாக உதவி செய்திருக்கிறார். தனது தாய்க்கு பெட் வாங்கிக்கொடுக்க ஆசைப்பட்ட அந்த மாணவருடைய வீட்டிற்கு பெட் மற்றும் கையில் ரூ.25,000 பணம் கொடுத்து விஜய் உதவி செய்திருக்கிறார்.
விஜய் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பேசிய மாணவனின் தாயார் ” என்னுடைய மகன் பேசியதை விஜய் பார்ப்பார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. பார்த்தவுடன் பெட் வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் ரூ.25,000 பணம் எங்கள் மகனின் கல்லூரி படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாகக் கூறி விஜய் சார் எங்களுக்குப் பெரிய உதவிகளைச் செய்துள்ளார்” எனவும் நெகிழ்ச்சியாகப் பேசினார். வீடியோ பார்த்த ஒரே நாளில் மாணவனுக்கு விஜய் உதவி செய்துள்ள நிலையில் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.