விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!
100 மாவட்டச் செயலாளர்களையும் தவெக தலைவர் விஜய் தனித் தனியாக சந்திக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வருகின்ற 2026 சட்டமன் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை பனையூரில் இன்று நடந்த தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை. அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் நியமனம், கட்சி உட்கட்டமைப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது.
அதன்படி, இன்று த.வெ.க மாவட்ட செயலாளர்கள் இறுதி செய்யப்பட உள்ளனர். 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் 100 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இறுதி செய்யப்பட்ட த.வெ.க மாவட்ட செயலாளர்களை விஜய் தனித்தனியாக சந்தித்து பல்வேறு ஆலோசனை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.