தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தினரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.

TVKVijay - TN govt

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அனுமதி பெறவில்லை எனக் கூறி தவெகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று காலை மகளிர் தினத்தை முன்னிட்டு, 2026 தேர்தலில் திமுக அரசை மாற்ற உறுதியேற்போம் என்று விஜய் வலியுறுத்தினார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் வெளிட்ட வீடியோவில், “மகளிர் தினத்தையொட்டி தனது வாழ்த்துகளை பெண்களுக்கு அவர் பகிர்ந்துள்ளார். மேலும், திமுக அரசின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, இதனால் மகிழ்ச்சியில்லாமல் பெண்கள் இருப்பதாக அவர் சாடினார். “எல்லாமே மாற்றத்திற்கு உரியதுதான் என்றும், அதுபோல திமுக அரசையும் மாற்றுவோம் என்றும்” விஜய் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் பெண்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.

தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது. ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது.

இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்