த.வெ.க மாநாடு தேதியில் மாற்றமா? விஜய் தீவிர ஆலோசனை!
மாநாடு தேதி குறித்து த.வெ.க தலைவர் விஜய் உடன் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அடுத்த நகர்வாக முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். செப்டம்பர் 23-ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார்.
மாநாடு நடத்துவதற்கு முன்பே மக்களின் பாதுகாப்புகளை கருதி காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் ஒன்று த.வெ.கட்சிக்கு அனுப்பப்பட்டிருந்தது. காவல்துறை கேட்டிருந்த அந்த 21 கேள்விகளுக்கு வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தி பதில் அறிக்கை அளிக்கப்படும் எனவும் த.வெ.க சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, செப்.23 விக்கிரவாண்டியில் த.வெ.க மாநாடு நடத்த போராடி அனுமதி பெற்றாலும், குறுகிய காலமே இருப்பதால் மாவட்ட அளவில் மாநாட்டு ஏற்பாடுகளை நடத்தி ஆட்களை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்களை திரட்ட முடிவெடுத்துள்ள தவெக தலைமை அதற்கான ஏற்பாடுகளை செய்யவும், மாநாடு சிறப்பாக நடக்கவும், அகில இந்திய அளவில் தலைவர்களை மாநாட்டில் பங்கேற்க அழைக்கவும் ஆலோசிக்கப்படுவதால் மாநாட்டு தேதியை சிறிது தள்ளிப்போட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் த.வெ.க. நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, த.வெ.க. மாநாட்டை இம்மாதமே நடத்தியாக வேண்டும் என்று நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாகவும், மாநாட்டுக்கான பணிகளை நிர்வாகிகள் தீவிரப்படுத்த வேண்டும்.
மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து வரும் முழு பொறுப்பையும் பொறுப்பாளர்கள் ஏற்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.