சினிமாவில் தான் விஜய்..’அரசியலில் உதயநிதி தான்’ : கருணாஸ் பரபரப்பு பேட்டி!!
சென்னை : அரசியல்வாதியாக பார்த்தால் விஜய்யை விட உதயநிதி ஸ்டாலின் தான் பெரிய ஆள் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கிடையில், அண்மையில் தன்னுடைய கட்சிக்கொடியையும் அறிமுகம் செய்திருந்தார். இந்த சூழலில், விஜயின் அரசியல் வருகை பற்றி அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலருடைய தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் “விஜய் சினிமாவில் பெரிய நடிகர் ஆனால், அரசியலில் உதயநிதி தான் பெரிய ஆள்” என வெளிப்படையாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” விஜய் இன்றயை காலகட்டத்தில் பெரிய நடிகராக இருக்கிறார். அவர் சினிமாவை விட்டு சேவை மனப்பான்மையுடன் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால், அவர் நினைப்பது போல அரசியல் என்பது எளிமையானதோ, சுலபமானதோ இல்லவே இல்லை” என கருணாஸ் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் வடிவேலு அரசியலுக்கு வந்தபோது அவரை பார்க்க கூட்டம் அதிகமாக வந்தது ஆனால் அனைத்தும் ஓட்டாக மாறவில்லை. எனவே, பார்க்க வருவது வேற ஓட்டுப்போட வைப்பது வேற” எனவும் கருணாஸ் கூறினார். பின் எம்ஜிஆர் வழியில் விஜய் என ஒப்பிட்டு பேசி வருவது பற்றியும் கருணாஸ் விளக்கம் கொடுத்து பேசினார்.
இது பற்றி பேசிய அவர் ” எல்லாத்துக்கும் எம்ஜிஆரை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். ஆனால், எம்ஜிஆருடைய அரசியலை நீங்கள் ஆரம்பத்தில் இருந்து பார்க்கவேண்டும். அவருடைய உழைப்புகள் அனைத்தையும் நீங்கள் பார்க்கவேண்டும். அன்றையக் காலக்கட்டம் என்பது வேற இந்த காலக்கட்டம் என்பது வேற” எனவும் கருணாஸ் கூறினார்.
பின் அந்த பேட்டியில் தொகுப்பாளர் 2026 விஜய்க்கும் , உதயநிதிக்கு தான் போட்டியா? என கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கருணாஸ் ” விஜய் உடைய மனதில் ஸ்டாலினுக்கு பிறகு 2026 உதயநிதி தேர்தலுக்கு வருவார் அவருக்கு போட்டியாக இறங்கினால் சரியாக இருக்கும் என்று அரசியலில் விஜய் இறங்கி இருக்கிறார். ஆனால், சினிமாவில் விஜய் பெரியவரா? உதயநிதி பெரியவரா? என்று பார்த்தால் விஜய் தான் பெரியவர்.
ஆனால், அதுவே அரசியல்வாதியாக பார்த்தால் விஜய்யை விட உதயநிதி ஸ்டாலின் தான் பெரிய ஆள். ஏனென்றால், அரசியல் பாரம்பரியமாக அதற்குள்ளவே இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு தான் நிறைய விஷயங்கள் தெரியும். எனவே யாரையும் குறைத்து எடை போடக்கூடாது” எனவும் கருணாஸ் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.