விஜய் அரசியலுக்கு வருவதால் சிலருக்கு பயம் …!விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு..? எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் அக்டோபர் 2 ஆம் தேதி மாலை நடைபெற்றது .இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கலாநிதிமாறன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஏற்கனவே ரகுமான் இசையமைத்து வெளியிடப்பட்ட 2 பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. டிஜிட்டல் தொழில்நுட்பமுறையில், அதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளமான www.sarkar.sunpicturs.in மூலம், விழாவில் கூடியிருந்த விஜய் ரசிகர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மொபைல்போன்களின் மூலம் அனைத்து பாடல்களையும், விஜய் ரசிகர்கள் தங்களது கைகளால் வெளியிட்டனர்.
பின்னர் சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் கற்பனை கேள்விகளை தொகுப்பாளரான நடிகர் பிரசன்னா கேட்டார் .அதற்கு பதில் அளித்த நடிகர் விஜய்,சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்.மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை.மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால், மாநிலம் தானாகவே நல்லதாக இருக்கும்.நான் முதல்வரானால் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன் ; ஆனால் முடியுமா என தெரியவில்லை.நெருக்கடி ஏற்பட்டால் இயற்கையாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள். அவர்கள் அமைப்பார்கள் நல்ல சர்க்கார் என்று அதிரடியாக பேசினார்.
இந்நிலையில் விஜய்யின் இந்த பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பாபநாசத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் விரும்புகிறேன் .விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர் .மக்களால் உயர்த்தப்பட்டவர் மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் என்ன தவறு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.