ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு விஜய் தான் திறப்பு விழா நடத்துனாரு! அண்ணாமலை பதிலடி!
அரசியல் என்பது வெறும் மைக் எடுத்து பேசிட்டு கை காட்டிட்டு போவது அரசியல் இல்ல என த.வெ.க தலைவர் விஜய் பேச்சுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பேசியது தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்கான விஷயமாக மாறியுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர் ” உங்கள் (திமுக) சீக்ரெட் ஓனர் மாண்புமிகு மோடி ஜி அவர்களே, உங்க பேற சொல்ல எங்களுக்கு என்ன பயமா? காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி, கொள்ளையடிக்க பாஜகவுடன் மறைமுக கூட்டணி. தமிழகம் என்றாலே மத்தியில் அலர்ஜி. ஜிஎஸ்டி மட்டும் சரியாக வாங்குவீங்க. ஆனால் , நிதி தர மாட்டீங்க. மும்மொழி கொள்கையை இங்கு திணிப்பீங்க.
ஒரே நாடு ஒரே தேர்தல் என நீங்க கொண்டு வரும்போதே மோடி சார் உங்கள் திட்டம் தெரிஞ்சிடுச்சி. தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன ஸ்டேட் சார்” என பாஜகவை விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதனையடுத்து, விஜய் வைத்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.
டெல்லியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது செய்தியாளர் ஒருவர் த.வெ.க பொதுக்குழுவில் விஜய் அவர் மீது வைத்த விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை ” விஜய் ஒரு விஷயத்தை முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும். ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு சிறப்பு விழா நடத்தியதே விஜய் தான். சகோதரர் விஜய் தான் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை குருவி படத்தின் மூலம் தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அது மட்டுமில்ல ஆதாரத்துடன் சொல்கிறேன்..பீஸ்ட் மற்றும் இன்னொரு விஜய் படத்தை ரெட் ஜெயண்ட் தான் விநியோகம் செய்தது.
எனவே, பாஜக குறித்து அவர் பேசுகிறார் என்றால் அவரிடம் அவரே ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ளவேண்டும் மீடியா உலகம் இன்று உதயநிதி ஸ்டாலின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்றால் அதற்கு பூஜை போட்டு தேங்காய் உடைத்தது யார்? இன்றைக்கு மேடைபோட்டு தவெகவில் இருந்து பேசுகிறார்கள் அண்ணாமலை இப்படி அண்ணாமலை அப்படி என்று..அவர்களுக்கு பதில் சொல்லவில்லை என்றால் இந்த நேரத்தில் தப்பாகிவிடும்.
தவெகவில் இருக்கும் ஒருவர் முன்னதாக திமுகவில் இருந்தார். திமுகவுக்கு வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அதன்பிறகு லாட்டரி பணத்தை வைத்து திமுகவில் இருந்து விசிகவுக்கு தாவினார். இப்போது விசிகவில் இருந்து விஜய் கட்சிக்கு தாவியிருக்கிறார். அவருடைய எண்ணமே என்னவென்றால் தமிழக வெற்றிக் கழகத்தை லாட்டரி கழகமாக மாற்றவேண்டும் என்பது தான். இன்றைக்கு அவர்கள் எங்களை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஊழலை உடைத்து பேசுவதில் முதல் கட்சி என்றால் பாஜக தான். எனவே, எங்களை பார்த்து யாராவது திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று சொன்னால் நீங்களே யோசித்து கொள்ளுங்கள் அப்படி பேசுபவர்களின் பேச்சு எந்த மாதிரி பேச்சு என்று” எனவும் பேசினார். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி குறித்து விஜய் பேசியது பற்றிய கேள்வி அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ” இன்றைக்கு த.வெ.க ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவேண்டும். என்னவென்றால், அரசியல் என்பது வெறும் மைக் எடுத்து பேசிட்டு கை காட்டிட்டு போவது அரசியல் இல்ல களத்தில் நின்று வேலை பார்க்கணும் அது தான் அரசியல். அரசியலை பொறுத்தவரையில் ஒரு ரவுடியை ஒரு ரவுடி அடித்தால் தான் ரவுடி என்று ஏற்றுக்கொள்வார்கள். இது படத்தின் வசனம்.
இவர்கள் எல்லாம் அரசியலில் யார் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார்கள் என்பதை பார்த்து பேசுகிறார்கள். அப்படி பேசினால் மைலேஜ் கிடைக்கும் என்பதால் பேசுகிறார்கள். இன்றைக்கு ராகுல் காந்தியை பற்றி விஜயால் பேசமுடியுமா? நிச்சியமாக பேசவே முடியாது. விஜய் ஒருவரை பார்த்து குற்றச்சாட்டு வைக்கிறார் என்றால் பிரதமரை பார்த்து தான் வைக்க முடியும். அப்படி பேசினால் தான் மீடியா வெளிச்சம் கிடைக்கும் என்பதால் பேசுகிறார்.
எனவே, ஆதாரத்துடன் விஜயை பேச சொல்லுங்கள் நான் அவருக்கு நேரடியாக பதில் சொல்கிறேன். தினமும் போராடுவது தான் அரசியல். கட்சியை தொடங்கி 3 முறை மட்டும் வெளியே வருவது அரசியல் இல்லை. மற்றபடி திமுகவுக்கு எதிரியாக நிற்பது என்றால் பாஜக தான். அதிகம் கைது செய்யப்பட்டவர்கள் பாஜகவினர் தான். 2026 தேர்தலில் திமுகவே பாஜகவின் எதிரி. திமுகவை ஆட்சியில் இருந்து நீக்குவதே நோக்கம்” எனவும் அண்ணாமலை பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025