“திமுகவின் ஆணவ அரசியலை எதிர்த்து விஜய் கட்சி தொடங்கியுள்ளார்”…ராஜேந்திர பாலாஜி பேச்சு!
அரசின் தற்போதைய செயல்பாடுகளை நாங்கள் விமர்சனம் செய்து பேசினோம் என்றால் அது அரசியலில் என்பார்கள் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். கட்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ச்சியாக தன்னுடைய விமர்சனத்தையும் அரசுக்கு (திமுக) எதிராக முன் வைத்து வருகிறார். குறிப்பாக, த.வெ.க மாநாட்டில் நேரடியாக திமுகவை விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
அதனை தொடர்ந்து சமீபத்தில் கூட எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன எனவும், 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள்” எனவும் தன்னுடைய குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார்.
தொடர்ச்சியாக விஜய் திமுகவை விமர்சித்து வருவதும் அவருக்கு அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிக்கொண்டும் வருகிறார்கள். அது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் விஜய் அரசியல் வருகை குறித்து சிலர் தங்களுடைய வரவேற்பையும் தெரிவித்து வருகிறார்கள். அப்படி தான் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் விஜயின் அரசியல் பயணம் குறித்து பேசியுள்ளார்.
இன்று, எம்ஜிஆர் பிறந்தநாள் விழா என்பதால் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஒரு செய்தியாளர் விஜயின் அரசியல் வருகை குறித்தும் அவர் திமுக விமர்சனம் செய்வது குறித்தும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி ” புதியதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் மட்டுமின்றி அரசை யாரெல்லாம் விமர்சனம் செய்கிறார்களோ அது அரசியல் என்று சொல்வார்கள். அரசின் செயல்பாடுகளை நாங்கள் விமர்சித்தால் அரசியலில் என்பார்கள்.
என்னைப்பொறுத்தவரை, விஜய் திமுகவினுடைய அடக்குமுறை மற்றும் அவர்களுடைய ஆணவ அரசியலை எதிர்த்து தான் கட்சி தொடங்கியுள்ளார். என்று நினைக்கிறன். அதைப்போல, விஜயின் நிதானத்தை பார்க்கும்போது ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதி எப்படி நடந்து கொள்வாரோ அப்படி தான் நடந்து கொள்கிறார் என அவரை பார்க்கும்போது தெரிகின்றார். புதிதாக கட்சி தொடங்கிய விஜய் உள்ளிட்டோரும் திமுகவை விமர்சிப்பது அதிமுகவுக்கு பலம்” எனவும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.