“நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் விஜய் மாநாடு நடத்தியுள்ளார், வாழ்த்துகள்” விஜய பிரபாகரன்!
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக மாநாட்டில் விஜய் பேசியதற்கு, அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் விஜய பிரபாகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த அக்டோபர் 27-ம் தேதியன்று தவெகவின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார் அக்கட்சி தலைவர் விஜய். அப்போது, கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விசிகாவின் கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த கருத்துக்கு முதலில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆதரவு தெரிவித்து இருந்தாலும், அடுத்தடுத்து விசிக தலைவர் திருமாவளவன், மற்ற விசிக தலைவர்கள் இதனை கடுமையாக விமர்சித்தனர். ஆஃபர் கூறுவது போல இருக்கிறது. முதலில் தேர்தலில் நின்று வாக்கு சதவீதத்தை காட்டுங்கள் பிறகு கூட்டணி பற்றி விவாதியுங்கள் என்று எதிர் கருத்துக்கள் வெளியாகின.
அதே நேரம் தமிழக காங்கிரஸில் ஒரு சில தலைவர்கள், புதிய தமிழகம் கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அதிகாரத்தில் பங்கு என்ற விஜயின் கூற்றுக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக மாநாட்டில் விஜய் பேசியதற்கு, அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் விஜய பிரபாகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்றிருந்தார். அப்போது தவெக மாநாடு குறித்து தேமுதிகவின் விஜயபிரபாகரன் பேசுகையில், “அதிகாரத்தில் பெரிய கட்சி இருக்கும் போது அதை சரிசமமாக அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என பல கட்சிகள் பேசுவதை தேமுதிகவும் முன்வைக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு மாநாடு தானே முடிஞ்சிருக்கு.. இன்னும் பல நாட்கள் அவங்க உழைக்கணும். விஜயகாந்தை எடுத்துக்காட்டாக முன்வைத்து விஜய் மாநாடு நடத்தியுள்ளார். நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் விஜய் மாநாடு நடத்தியுள்ளார், அவருக்கு எனது வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு மாநாடு நடக்கும்போது நினைவுகளை சுட்டிக் காட்டுவது வழக்கம். அந்த வகையில், விஜயகாந்த் தலைமையில் நடந்த மாநாட்டை தினமும் நினைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்” என்று கூறினார். முன்னதாக, விஜயகாந்த் நடிகனாக இருந்து 2005 ல் அரசியல் கட்சி தொடங்கி 2005 செப்டம்பர் 14 அன்று மதுரையில் முதல் பிரம்மாண்ட மாநாடு நடத்தினார்.
அப்பொழுது, 25 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர் என்று பிரேமா விஜயகாந்த் நினைவு கூறியிருந்தார். தற்பொழுது, விஜய் தலைமையில் நடந்த மாநாட்டில் 10 லட்சம் வரை தொண்டர்கள் வருகை தந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.