“அன்பு தங்கைகளே., பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம்” விஜய் பரபரப்பு கடிதம்!
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாக தவெக தலைவர் விஜய் அறிக்கை வாயிலாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் கிண்டி பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததை குறிப்பிட்டு பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், ஆளும் அரசை விமர்சனம் செய்தும் தவெக தலைவர் விஜய் கைப்பட ஒரு பரபரப்பு கடித்தை எழுதியுள்ளார். அதில், கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என் அருமை தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம், எல்லா சூழ்நிலைகளிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும், எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை அமைத்தே தீர்வோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம். – உங்கள் அண்ணனாக பிரியமுடன் விஜய்.”