#BREAKING: விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது- தேர்தல் ஆணையம்..!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
இதனால், ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்டனர்.
அதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். பதிவு செய்யப்படாத நிலையில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது. சுயேட்சை வேட்பாளர்களுக்கு சுழற்சி முறையில் சின்னங்கள் ஒதுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மட்டுமே பொது சின்னம் ஒதுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.