தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறும் தனியார் கல்லூரி வளாகத்திற்கு அக்கட்சி தலைவர் விஜய் காரில் வந்திறங்கினார். இன்னும் சற்று நேரத்தில் அவர் பேசவுள்ளார்.

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதற்காக இன்று காலையில் அக்கட்சி தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனியார் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு கோவை வந்த விஜய்க்கு தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு திறந்தவெளி வாகனத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சிறுது தூரம் ரோட் ஷோ சென்ற விஜய், பிறகு அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றார். இன்று பிற்பகல் 3 மணிக்கு கருத்தரங்கு தொடங்கும் எனக் கூறப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னின்று மேற்கொண்டார்.
பூத் கமிட்டி கருத்தரங்கில் அனுமதிக்கபட்ட கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே உள்ளே அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். உள்ளே அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் செல்போன் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதியில்லை. அதன் பிறகு உள்ளே செல்பவர்களுக்கு சில சிற்றுணவுகள் வழங்கப்பட்டு அரங்கிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதனை அடுத்து விஜய், தான் தங்கியிருந்த தனியார் விடுதியில் இருந்து காரில் புறப்பட்டு கருத்தரங்கு நடைபெறும் சரவணம்பட்டி தனியார் கல்லூரி வளாகத்திற்கு வந்தடைந்தார். தொண்டர்கள் புடைசூழ காரில் வந்த விஜயை வாழ்த்தி வழிநெடுக கட்சித் தொண்டர்கள் கோஷமிட்டபடி பின் தொடர்ந்தனர்.
பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறும் இடத்திற்கு விஜய் வந்ததை அடுத்து நிகழ்வு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் வாக்குசாவடியில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது. இன்னும் சற்று நேரத்தில் பூத் கமிட்டி கருத்தரங்கில் பேசும் விஜய் , தேர்தல் சமயத்தில் முகவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி விளக்குவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஐடி விங் நிர்வாகிகள் கூட்டத்தில் தவெக இணைய பொறுப்பாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.