“டாக்டர் இல்லை., சிகிச்சை இல்லை, விக்னேஷ் உயிரிழந்து விட்டான்.!” கதறி அழும் அண்ணன்.! 

கிண்டி அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் தனது சகோதரன் உயிரிழந்ததாக, விக்னேஷின் அண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Man Died in Guindy Hospital

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், இதே மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜி என்பவரை ஒரு இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் நேற்று முன்தினம் அங்கு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இப்படியான சூழலில், நேற்று முன்தினம் இரவு கிண்டி அரசு மருத்துவமனைக்கு விக்னேஷ் (வயது 30) எனும் இளைஞர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பித்தப்பையில் கல் இருந்ததாக்கவும், ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து அங்கு சிகிச்சை தொடர முடியாத சூழல் காரணமாக கிண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரும் போதே உடல்நலம் தீவிரமாக மோசமடைந்து இருந்தது என்றும், உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து தான், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தோம். ஆனால் உடல்நலம் இன்னும் மோசமடைந்ததால் விக்னேஷ் உயிரிழந்துவிட்டார் என மருத்துவனை தரப்பு கூறியுள்ளது.

உயிரிழந்த விக்னேஷின் அண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “13ஆம் தேதி (நேற்று முன்தினம்) இரவு வயிறு வலி அதிகமாக இருந்ததன் காரணமாக விக்னேஷை கிண்டி மருத்துவமனையில் அனுமதித்தோம். பித்தப்பையில் கல் இருந்தது என கூறி அட்மிசன் போட்டோம்.  முதலில் அவசர சிகிச்சை பிரிவில் பார்த்தார்கள். அங்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை. பிறகு, நார்மல் வார்டுக்கு மாற்றிவிட்டார்கள். அங்கும் சரிவர சிகிச்சை அளிக்கவில்லை.  நேற்று வயிறு வலி அதிகமாகி மூச்சுவிட திணறினான். அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் சுவாச கருவிகள் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் டாக்டர்கள் யாரும் சரிவர விக்னேசுக்கு சிகிச்சை அளிக்கவில்லை.

டாக்டர்கள் வந்து யாரும் பார்க்கவில்லை. டாக்டர்கள் இல்லை என்று கூறினால் நாங்கள் வேறு மருத்துவமனை சென்றிருப்போம். தனியார் மருத்துவமனையில் எங்களால் பணம் கட்ட முடியவில்லை. ஒருநாளைக்கு ரூ.15 ஆயிரம் கட்ட வேண்டும் என சொன்னார்கள். அதனால் இங்கு வந்தோம். இங்கு அவனுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துவிட்டான். ” என உயிரிழந்த விக்னேஷின் அண்ணன் அழுதபடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விக்னேஷிற்கு மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஒன்று உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்