சென்னையில் விடிய விடிய கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வருகிற 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வட கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையிலும் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
இதனையடுத்து கோயம்பேடு, எழும்பூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.