ஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு 3 கோடி ரூபாயை வீணடித்தது விடியா திமுக அரசு! – இபிஎஸ்

Default Image

ஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு மூன்று கோடி ரூபாயை வீணடித்தது விடியா திமுக அரசு என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

இதுதொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது தலைமையிலான அம்மாவின் அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் இந்த செயல் திறனற்ற விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளது.

கடந்த 19.12.2022 அன்று அம்மாவின் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தங்கிலீஷில் “நம்ம ஸ்கூல்” என்று நாமகரணம் சூட்டி இந்த விடியா அரசின் முதலமைச்சர் மீண்டும் அதை துவக்கி வைத்திருக்கிறார்.

23.5.2017 அன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் வரை சுமார் 82 கோடி ரூபாய் சி.எஸ்.ஆர். நிதியாக வரப்பெற்றது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்யும் ஆர்வத்துடன் இருந்த தொழில் நிறுவனங்களுக்கும், ஆர்வலர்களுக்கும், முன்னாள் பள்ளி மாணவர்களுக்கும் எளிய, நம்பசுத்தன்மை கொண்ட இணைய வழித்தடமும் ஏற்படுத்தும் விதமாக, நான் தலைமைச் செயலகத்தில், இணையவழி நிதி திரட்டும் இணைய தளத்தை தொடங்கும் விழாவை எளியையாக துவக்கி வைத்தேன்.

தமிழக மக்களுக்கு நன்மைகளை வழங்கிய பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்வதில் குறியாக இருந்த, சந்தர்ப்பவசத்தால் ஆட்சிக்கு வந்த இந்த விடியா திமுக அரசு, வெற்றிகரமாக செயல்பட்டு வந்த இத்திட்டத்தையும், தனியாக துவக்கப்பட்ட இணையதளத்திற்கும் மூடுவிழா நடத்தியது இந்த விடியா அரசு.

இந்த நிலையில், எனது ஆட்சிக் காலத்தில் எளிமையாக துவக்கி வைக்கப்பட்ட, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்ய நிதி வசூலிக்கும் இத்திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சுமார் 3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக நேற்றைய நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.

அரசின் நிதி நிலைமை தள்ளாட்டத்தில் உள்ளது என்று கூறும் இந்த அரசு, மூன்று கோடி ரூபாயை வீனாடித்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஏன் ? சொல் ஒன்று, செயல் ஒன்று எனவும், சித்தம் போக்கு-சிவம் போக்கு என்றும் செயல்படும் இந்த விடியா அரசு, மக்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்