“விடியா அரசே… அம்மாவின் ஆட்சியில் கருவூலகத்திற்கு முழுமையாக சென்ற இந்த வருவாய்;தற்போதும் செல்ல வேண்டும்”-ஈபிஎஸ் வலியுறுத்தல்!

Default Image

தமிழகத்தில் உள்ள கல் குவாரிகளில் பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை திமுக அரசு களைந்திட வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

அம்மாவின் அரசில்,எப்படி கல் குவாரிகளின் வருவாய் முழுமையாக அரசின் கருவூலத்திற்கு சென்றடைந்ததோ,அதன்படி தற்போதும் கல் குவாரிகள் மூலம் வரவேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்தைச் சென்றடைவதை, இந்த விடியா அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும்,கல் குவாரிகளில் பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை களைந்திட வேண்டும் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், தொடர்ந்து அம்மாவின் அரசும், கல் குவாரிகள் மூலம் அரசின் கருவூலத்திற்கு வரவேண்டிய பணம் தனியார் கையில் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, குவாரிகளின் செயல்பாட்டினை முறைப்படுத்தினர்.

பொதுவாக, ஒரு கல் குவாரி நடத்துவதற்கு அரசுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொரு வருடமும் எவ்வளவு யூனிட் ஜல்லி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று விரிவாக திட்ட அனுமதியில் தெரிவிக்க வேண்டும். மழைக் காலம் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஜல்லியின் தேவை குறைவு. எனவே, குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக விடுமுறையில் செல்வது வழக்கம். கோடை மற்றும் இதர மாதங்களில் கட்டுமானப் பணிகள் அதிகமாக நடைபெறும், ஜல்லியின் தேவையும் அதிகம். அப்போது, அதன் விலை அதிகரிக்காத வண்ணம் குவாரி உரிமையாளர்கள் ஜல்லி உற்பத்தியை அதிகரிப்பார்கள். எனவே, ஜல்லியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, தேவைக்கேற்ப ஜல்லி உற்பத்தி அதிகரிக்கப்படும். இதனால் விலை நிலையாக இருக்கும்.

உதாரணமாக, அம்மா ஆட்சியிலும், தொடர்ந்து அம்மாவின் அரசு ஆட்சி செய்தபோதும், முதல் வருடம் சுமார் 12000 யூனிட் ஜல்லி தயாரிக்கப்படும் என்று கூறி கல் குவாரி நடத்துவதற்கு அனுமதி பெற்றவர்கள், ஒவ்வொரு மாதமும் பருவ நிலைக்கு ஏற்றவாறு, அதாவது மழைக் காலம் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஜல்லி உற்பத்தியினை குறைத்தும், மற்ற மாதங்களில் ஜல்லி உற்பத்தியினை அதிகரித்தும், ஒரு மாதத்திற்கு இத்தனை யூனிட் ஜல்லி உற்பத்தி செய்கிறோம் என்று பர்மிட் கோரி விண்ணப்பித்தனர். உதவி இயக்குநர்களும் அதற்கேற்ப 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ பர்மிட் வழங்கி வந்தனர்.

இதனால் சந்தையில் கட்டுமான தேவைக்கேற்றவாறு ஜல்லி கிடைப்பதில் எந்தவிதமான சிக்கல் இல்லாமலும், ஜல்லிக்கு செயற்கையான விலையேற்றம் இல்லாமலும் விலை நிலையாக இருந்து வந்தது.
ஆனால், இந்த விடியா அரசு பொறுப்பேற்றதில் இருந்து கல் குவாரிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளில் ஒருசிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்த ஆட்சியில், கடந்த இரண்டு மாதங்களாக கல்குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பர்மிட் முறையில் மாற்றம் செய்யப்பட்டது. உதாரணமாக, ஆண்டுக்கு சுமார் 12000 யூனிட் ஜல்லி உற்பத்தி செய்யப்படும் என்று கூறி குவாரி நடத்த அனுமதி பெற்றவர்கள், அந்த வருடத்திற்கான மொத்த உற்பத்தியை 12 மாதங்களுக்கு சமமாகப் பிரித்து, மாதத்திற்கு 1000 யூனிட் ஜல்லி வீதம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற புதிய விதியினை, உதவி இயக்குநர் மூலமாக தமிழக அரசு தங்கள் மீது திணிப்பதாக கல் குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால், மழைக் காலங்கள், பண்டிகைக் காலங்களில் கட்டுமானப் பொருட்களின் தேவை குறைவாக இருந்தாலும் அல்லது மற்ற மாதங்களில் அதிகமாக இருந்தாலும், அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், மொத்த ஆண்டு உற்பத்தியில், ஒரு மாதத்திற்கான சராசரி 1000 யூனிட் ஜல்லியை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் புதிய நிபந்தனையை விதிப்பதாக, கல் குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த பர்மிட் முறை தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை என்று மாற்றப்பட்டு உள்ளதாகவும் கல் குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் 3 நாட்களுக்கு ஒருமுறை ஜல்லி உற்பத்தியாளர்கள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. தேவையான அனுமதியைப் பெற ஒருநாள் முழுமையாக செலவாகிறது என்று ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

இதனால், மூன்று நாட்களுக்கு பர்மிட் வாங்கினாலும், மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கு ஜல்லியை உற்பத்தி செய்யவும், வாகனங்களில் கொண்டு செல்லவும் இயலும். இவ்வாறு முறைப்படி கல் குவாரி நடத்துவதற்கு அனுமதி வாங்கி, ஜல்லி உற்பத்தி செய்பவர்களை இந்த அரசு இவ்வாறு கெடுபிடிகள் செய்கிறது.

ஆனால், 50 சதவீதத்திற்கு மேல் காலாவதியான கல் குவாரிகள், எந்தவிதமான பர்மிட்டும் பெறாமல், கவனிக்க வேண்டிய ஆளும் கட்சியினரை கவனித்துவிட்டு, ஜல்லி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பதாக இச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதனால், அரசுக்கு வரவேண்டிய வருவாய் முழுவதும் எங்கே போகிறதென்று நான் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. கரூர், புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் போன்ற ஒரு சில மாவட்டங்களில் இது போன்ற நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுகிறது என்று கல்குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், இது போன்று விதிகளுக்குப் புறம்பாக கல்குவாரிகள் நடத்துபவர்கள், விதிகளின்படி செயல்படும் குவாரிகள், விதிகளை மீறி செயல்படுகிறார்கள் என்று அரசுக்கு மொட்டை பெட்டிஷன் போட்டு, தேவையின்றி மூடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று கல்குவாரி உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த அரசு, உடனடியாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை பர்மிட் வழங்கப்படும் என்ற புதிய நடைமுறையினை மாற்றி, பழையபடி 15 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ பர்மிட் வழங்க வேண்டும் என்றும், காலாவதியான கல் குவாரிகளில் எந்தவிதமான பர்மிட்டும் பெறாமல் ஜல்லியை உற்பத்தி செய்து விற்பனை செய்வதை அனுமதிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாண்புமிகு அம்மாவின் அரசில், எப்படி கல் குவாரிகளின் வருவாய் முழுமையாக அரசின் கருவூலத்திற்கு சென்றடைந்ததோ, அதன்படி இப்போதும் கல் குவாரிகள் மூலம் வரவேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்தைச் சென்றடைவதை, இந்த விடியா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIve 2 - BJP - TVK
muthu (9) (1)
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat