சமூகநீதியின்பால் பற்றுக்கொண்ட திமுகவுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி! – முதலமைச்சர்
சமூக மக்களாட்சியை நிலைநிறுத்தும் வரையிலும் நமது பணி தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் உறுதியளித்தது. இதுபோன்று உயர்சாதி ஏழைகளுக்கு (EWS) 10% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்கப்படும் என்றும் இதற்கான இடஒதுக்கீடு தொடர்பாக மார்ச் 3-வது வாரம் விரிவான தீர்ப்பு வழங்கப்படடும் கூறப்பட்டது.
இந்த நிலையில், PG மருத்துவப் படிப்புகளில் AIQக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுக்கொண்ட திமுகவுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறேன். கடந்த பல ஆண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழகம், அரசியல் களத்திலும் நீதிமன்றங்களிலும் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் விளைவாக, முதல் முறையாக அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது சமூகநீதியைப் பற்றிய புரிதலும் ஆழமான பற்றுதலும் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி! சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல். இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4,000 மாணவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இதன்மூலம் தங்களுடைய உரிமையை, பலனைப் பெறுவார்கள்.
நாடு முழுவதும் உள்ள கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, உச்சநீதிமன்ற வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு, வாதிட்டு வென்ற இயக்கம் திமுக என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். திமுகவும் சமூகநீதியின்பால் பற்றுகொண்ட இயக்கங்களும் நடத்திய போராட்டம், இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.
மிகுந்த மனநிறைவோடு இந்தப் போராட்டத்தில் துணைநின்று பங்களித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதியின் முன்னோடி மாநிலமான தமிழ்நாடும், சமூகநீதியில் மாறாத பற்றைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் அளித்துள்ள பங்களிப்பு வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும்.
அண்மைக் காலத்தில் எல்லா மாநிலங்களிலும் பரவலான அளவில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, அந்த மாநில மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. அகில இந்திய தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்கப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒவ்வொரு மாநிலமும் அதன் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி 100 விழுக்காடு இடங்களையும் நிரப்பிக் கொள்ளும் நடைமுறை வர வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலை.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில், உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள விரிவான விசாரணையின்போதும், அரசியல்சாசன அமர்வின் முன் உள்ள மூல வழக்கிலும், 10% இடஒதுக்கீடு சட்டவிரோதமானது என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து திமுக விரிவான வாதங்களை வைக்கும், அந்த அநீதியை முறியடிக்கும் போராட்டத்திலும் வெல்லும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், எல்லாத் தளங்களிலும் தங்கள் பங்கைப் பெற்று சமூக மக்களாட்சியை நிலைநிறுத்தும் வரையிலும் நமது பணியையும் போராட்டத்தையும் சமரசமின்றித் தொடர உறுதி ஏற்போம். இந்தியா சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து நடைபோட தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழும்! திராவிட முன்னேற்றக் கழகம் அதற்கு என்றும் போராடும் என்று கூறியுள்ளார்.
PG மருத்துவப் படிப்புகளில் AIQக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், 27% #OBCreservation செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுக்கொண்ட திமுகவுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி!#EWS அநீதியையும் வெல்வோம்!https://t.co/eDIDtZhK7w#ReservationIsOurRight pic.twitter.com/WNevo7nGfU
— M.K.Stalin (@mkstalin) January 7, 2022