துணைவேந்தர் நியமனம் மசோதா – மாற்றங்கள் என்னென்ன? இதோ உங்களுக்காக!

Default Image

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவின் மாற்றங்கள் என்னென்ன? என்பதை காணலாம்.

உதகையில் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்து வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்டமசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். எனவே, பல்கலைக்கழக துணைவேந்தர்களை இதுவரை ஆளுநர் நியமித்து வந்த நிலையில், நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மூலம் இனி தமிழக அரசே நியமிக்கும். தெலங்கானா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கிறது என்று தமிழக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், துணைவேந்தர் நியமனம் மசோதா மூலம் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, இந்த மசோதா மூலம் பல்கலைக்கழக துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில் தமிழக அரசே நியமிக்கும். இதுவரை ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் உள்ள துணைவேந்தர்கள் நியமனம், இனி தமிழக அரசின் நேரடி அதிகாரத்திற்கு வரும். இதுவரை தேர்வுக்குழு பரிந்துரைக்கும் 3 பேரில் ஒருவரை ஆளுநர், துணைவேந்தராக நியமிப்பார்.

இனி தேர்வுக்குழு பரிந்துரை மீது தமிழ்நாடு அரசே இறுதி முடிவு எடுக்கும். துணைவேந்தர் நியமன முறை மாற்றப்பட்டாலும், இணை வேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரே நீடிப்பார். இந்த மசோதாவின்படி, துணைவேந்தர்களை ஆளுநர் தன்னிச்சையாக நீக்க முடியாது. துணைவேந்தர்கள் மீது புகார் எழுந்தால் உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான குழு விசாரணை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்