28-ஆம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! “ஆரஞ்சு அலர்ட்” கொடுத்த வானிலை மையம்!
இன்று முதல் வரும் நவம்பர் 29-ஆம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த புயலுக்கு ஃபெங்கல் (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்பில் தகவலை தெரிவித்திருந்தது.
புயல் உருவான பிறகு அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால் அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று முதல் வரும் நவம்பர் 29-ஆம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது? அதற்கான ஆரஞ்சு அலர்ட் எந்த மாவட்டத்திற்கெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று (நவம்பர் 26) : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
(நவம்பர் 27) : காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.
(நவம்பர் 28) : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதால் இந்த தேதிகளில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.