வலுவிழந்த புயல்… நாளை எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை : வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை அருகே நள்ளிரவு கரையை கடந்த புயல் இன்று காலை 11.30 மணிக்கு வலுவிழந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை (டிச.2) 5 மாவட்டங்களுக்கு மிகக்கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாளை மறுநாள் (டிச.3) திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.