சென்னைக்கு அருகில்..15 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
சென்னை : வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. முன்னதாக 12 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது 15 கி.மீ ஆக அதிகரித்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி- நெல்லூர் இடையே நாளை (அக். 17) அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்-கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
முன்னதாக, 440கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனிடையே, தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக விலகிய நிலையில், தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், பாலான கனமழை பெய்து வருகிறது.