வேங்கைவயல் விவகாரம் : “வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”…அண்ணாமலை அறிக்கை!

வேங்கைவயல் வழக்கை, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

vengaivayal annamalai

சென்னை :  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் இதற்கான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழக அரசு சார்பில் சிபிசிஐடி போலிசார் முன்னரே தாக்கல் செய்யப்பட்டு இருந்தது எனக் கூறப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விவரங்கள் நேற்று வெளியானது.

அதில், ஆயுதப்படை காவலராக இருந்த முரளி ராஜா (வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்), முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூன்று பேர் தான் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவர் பத்மா என்பவரின் கணவரை பழிவாங்கும் நோக்கத்தில்  இச்சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இவர்கள் மூன்று பேரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சிபிசிஐடி போலீஸ் பதிவு செய்திருந்த வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் என கூறப்பட்ட 3 பேரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிபிஐ விசாரணைக்கு இதனை மாற்ற வேண்டும் என திருமாவளவன் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில், வேங்கைவயல் வழக்கை, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது ” வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேரையே குற்றவாளிகள் என்று திமுக அரசு கூறியிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்த சம்பவம் நடந்த உடனடியாக, வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், 26.12.2022 அன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர், விசாரணை என்ற பெயரில், பட்டியல் சமூக இளைஞர்களையே தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

எனவே, பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதில் தொய்வு காட்டிய காவல்துறைக்கும், திமுக அரசுக்கும் எதிராகப் போராட்டங்களை நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்திற்குப் பிறகு, இந்த வழக்கை, சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றியது திமுக அரசு. ஆனாலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

முன்னதாக இந்த வழக்கில் இன்றுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், வழக்கை நடத்துவதில் தமிழகக் காவல்துறை பொறுப்பின்றி செயல்படுகிறது என்றும் எடுத்துக் கூறப்பட்டதை கூறப்பட்டதை அடுத்து,  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அவர்கள் அமர்வு, அடுத்த மூன்று மாதங்களுக்குள், அதாவது 03.07.2024 அன்று அல்லது அதற்கு முன்னர், விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.

இதனிடையே, 23.01.2025 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் இந்தப் பொதுநல வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, கடந்த 20.01.2025 அன்றே, புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூவர் மீது 20.01.2025 அன்றே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றால், 23.01.2025 அன்று, புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி அவகாசம் கேட்டது ஏன்?

இரண்டு நாட்களுக்கு முன்பாக, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கால அவகாசம் வேண்டும் என்று காவல்துறை மனுத்தாக்கல் செய்த நிலையில், அவசர அவசரமாக, பட்டியல் சமூக இளைஞர்கள் மூன்று பேர் மீதே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாகக் கூறுவது, பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக அரசின் கீழ் நடக்கும் இந்த விசாரணையின் மீது, பொதுமக்களுக்கு துளியளவு நம்பிக்கையும் இல்லை. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நோக்கமாகத் தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு” எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்