வேங்கைவயல் விவகாரம் : “குற்றப் பத்திரிகையை ஏற்கக் கூடாது”..நீதிமன்றத்தில் மனு!
வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை :புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதிபயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது . இது குறித்து வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர். முதற்கட்டமாக 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அதில் குற்றவாளிகளை கண்டறியாமல் இருந்ததால், அடுத்த கட்டமாக 2023 ஜனவரியில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் கை மாறியது.
அப்போது, சுமார் 300 சாட்சியங்களையும், 31 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனையையும், குரல் மாதிரிகளையும் பரிசோதனை செய்து தங்கள் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தின் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. சுமார் 700 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த விசாரணை தொடர்பாக, இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழக அரசு சார்பில் சிபிசிஐடி போலிசார் முன்னரே தாக்கல் செய்யப்பட்டு இருந்தது எனக்கூறப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விவரங்கள் சமீபத்தில் வெளியானது.
அதில் வெளியான தகவலின் படி, ஆயுதப்படை காவலராக இருந்த முரளி ராஜா (வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்), முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூன்று பேர் தான் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவர் பத்மா என்பவரின் கணவரை பழிவாங்கும் நோக்கத்தில் இச்சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இவர்கள் மூன்று பேரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சிபிசிஐடி போலீஸ் பதிவு செய்திருந்த வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்த குற்றப்பத்திரிகை குறித்து வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்று அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கைளை வைத்து வருகிறார்கள். குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் தெரிவித்திருந்தார்கள்.
இந்த சூழலில், வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என வேங்கைவயல் பட்டியலின மக்கள் சார்பாக சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் மனு கொடுத்துள்ளனர். புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.