எந்த கட்சி பேனர் வைத்தாலும் ஓராண்டு சிறை நிச்சயம்! வேலூர் கலெக்டர் அதிரடி!
சென்னை, பள்ளிக்கரணை பிரதான சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர், சரிந்து சாலையில் வந்துகொண்டு இருந்த சுபஸ்ரீ பெண் பொறியாளர் மீது விழுந்தது. அதில் தடுமாறி அந்த பெண் கீழே விழுந்தபோது பின்னாடி வந்த தண்ணீர் லாரி மோதியதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு அதிகாரிகளை தனது ஆக்ரோஷமான கேள்விகளால் துளைத்தெடுத்தார். இதனால் பேனர் கலாச்சாரத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் அதிரடி உத்தரவை வெளியிட்டார். அந்த உத்தரவில், இனி சாலை இருபுறம், நடைமேடை, சாலை நடுவில், கல்வி மையங்கள், வழிபாட்டு தளங்கள் என எங்கும் எந்த ஒரு பதிவு செய்த அரசியல் கட்சிகளின் பேனர் இருக்கக்கூடாது எனவும், தற்காலிக விளம்பரங்கள் இனி 6 நாட்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒவ்வோர் விளம்பரத்திற்கும் இடையே 10மீ இடைவெளி இருக்க வேண்டும். அதனை மீறுவோருக்கு 1 வருடம் சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதம் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பேனர் விவகாரத்தில் வேலூர் மாவட்டம் முன்மாதிரியாக இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். பேனர் தொடர்பாக பொதுமக்களும் புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.