பக்தர்கள் இன்றி நடைபெற்ற வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி!
நாகையில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி.
நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்தில், வருடம் தோறும் 10 நாட்கள் திருவிழா அட்டகாசமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்த வருடம் பக்தர்கள் இன்றி மிகவும் சாதாரணமான நிலையில் திருவிழா நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட இந்த திருவிழாவில், பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக 8 வழிகளும் ஆலயத்தை சுற்றி அடைக்கப்பட்ட நிலையிலேயே கடந்த ஒன்பது நாட்களும் இருந்துள்ளது. இந்நிலையில் உள்ளூர் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் 5.30 மணி வரை வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இறுதி நிகழ்ச்சி தேர்பவனி நேற்று நடைபெற்றுள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு, புனித மிக்கேல், சூசையப்பர், அன்னை மாதா ஆகியோரின் பெரிய தேர்கள் பவனியாக சென்றுள்ளது. ஆலயத்தை சுற்றி தேர்பவனி நடந்தாலும் பேராலய அதிபர் பங்குத்தந்தை, திருச்சி மண்டல ஐஜி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்ட படி இந்த தேர் பவனி நடைபெற்றது. எப்பொழுதும் கோலாகலமாக இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ளவர்களும் வந்து கலந்து கொள்ளக் கூடிய அளவு பிரமாண்டமாக நடக்க கூடிய இந்த திருவிழா இந்த வருடம் மக்கள் இன்றி கொடி ஏற்றப்பட்டு, தேர் பவனியும் நடைபெற்றுள்ளது.