வார்டு வாரியாக 100 வாகனங்களில் காய்கறிகள் விற்கப்படுகிறது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50லிருந்து 67 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது:-கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். காய்கறி சந்தை போன்ற பொது இடங்களில் சமூக விலகலை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
வார்டு வாரியாக 100 வாகனங்களில் காய்கறிகள் விற்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். மேலும் கோவையில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சனைகளும் எந்தவித பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.