இலவு காத்த கிளியாக காத்திருக்க வேண்டாம்! அதிமுக பற்றி திருமாவளவன் சூசகம்
VCK: இலவு காத்த கிளி போல கூட்டணிக்கு யாரும் காத்திருக்க வேண்டாம் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக திட்டமிட்டிருந்தது. ஆனால், பேச்சுவார்த்தையில் திருமாவளவன் பங்கெடுக்கவில்லை. இந்த நிலையில், விசிக தலைமையகத்தில் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
Read More – மோடி அரசின் மெகா ‘மொய்’ – சு.வெங்கடேசன் எம்.பி கடும் விமர்சனம்!
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “இன்று நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், தேர்தல் அறிக்கைக் குழு, தேர்தல் நிதிக் குழு, தலைமையக ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்புக் குழு என நான்கு குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. உயர்நிலைக் குழுக் கூட்டம் முடிவதற்குத் தாமதமானதால், திமுக கூட்டணித் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இன்னொரு நாளுக்கு மாற்றித் திட்டமிட்டிருக்கிறோம். இது தொடர்பாகத் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒருவேளை தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வரைச் சந்திக்கும் அவசியம் ஏற்பட்டால், சந்திப்போம். கூட்டணியில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளாவது கேட்டுப் பெறுவது எனப் பேசியிருக்கிறோம். இந்தியா கூட்டணியுடன் தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸின் காயத்துக்கு எங்களிடம் மருந்திருக்கிறது என அதிமுக தெரிவித்திருக்கிறது.
Read More – சத்குருவின் விருப்பப் பாடலை பாடிய ஜெர்மன் பாடகி!
காங்கிரஸ் தலைமையில் தான் இந்தியா கூட்டணி இயங்குகிறது. திமுக -காங்கிரஸ் இடையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஒருநாள் இரண்டு நாள் தாமதமாகுமே தவிர, கூட்டணி உறுதியாக இந்தியா கூட்டணியுடன் தான். எனவே, இலவு காத்த கிளியாக யாரும் காத்திருக்க வேண்டாம். 2006 முதல் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுகிறோம். இந்தத் தேர்தலிலும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” என்றார்.