நான் கூறிய கருத்து விஜய்க்கு எதிரானது அல்ல.! விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்.!
நடிகர் விஜயை மனதில் வைத்து நான் கருத்து கூறவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் அண்மையில் தமிழகத்தில் ஓவ்வொரு தொகுதியிலும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை , நினைவு பரிசு உள்ளிட்டவை வழங்கினார். அந்த சமயம் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் சினிமாத்துறைனர் அரசியலுக்கு வருவது தமிழக அரசியலின் சாபக்கேடு என கடுமையாக விமர்சித்து இருந்தார். அந்த சமயம் இது விஜய்க்கு எதிராக பகிரப்பட்ட கருத்து என அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது.
தற்போது இந்த விவகாரம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது விளக்கத்தை அளித்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், நான் யாரையும் காழ்ப்புணர்வோடு விமர்சிக்கவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவதை நான் வரவேற்றேன். அதே போல விஜய் அரசியலுக்கு வருவதையும் வரவேற்றேன். தமிழகத்தில் ஓர் உளவியல் கட்டமைப்பு உள்ளது. சினிமா பாடல்களில் கூடா அது கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழர்கள் தங்கள் தலைவர்களை திரையரங்குகளில் தேடுகிறார்கள் என்று கூறப்படுவதுண்டு என கூறினார்.
அதே போல தமிழக அரசியல் நீண்ட காலமாக சினிமாவை சார்ந்தததாக இருந்தது. திரை பிரபலங்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்படுகிறது. தமிழகத்தை தவிர எந்த சூப்பர் ஸ்டாரும் கடைசி காலத்தில் ரசிகர் பலத்தை வைத்து கொண்டு அரசியலில் இறங்கியது இல்லை. அப்படி அரசியலில் பெரிய நடிகர்கள் இறங்கும் போது அவர்கள் அரசியல் களத்தில் போராட தேவையில்லை. சினிமா பாப்புலர் போதும். சிறை செல்ல தேவையில்லை. அரசியலில் அடியெடுத்து வைத்ததும் முதல்வர் ஆகிவிடலாம் என எண்ணுகிறார்கள். இதனை தான் எதிர்க்கிறேன் எனவும் தனது கருத்தை முன்னிறுத்தினார்.
மேலும், தற்போதும், பொதுவாழ்வில் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு போன்றோர் இன்னும் இருக்கிறார்கள். 98 வயதிலும் மேடை ஏறுகிறார். அவர் தொடாத போராட்டம் இல்லை. விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.
மேலும், தமிழக மக்களுக்கு இது போல இருக்கும் இந்த உளவியலை எதிர்த்து தான் நான் விமர்சனம் செய்கிறேன். சினிமாவில் மார்க்கெட் உள்ளவரை பொருள் ஈட்டிகொண்டு, புகழ் பெற்றுக்கொண்டு அதன் பிறகு அரசியலுக்கு வருவதும் ஒருவகை சுரண்டல் தான். அந்த உளவியலை தான் நான் அன்று சற்று ஆதங்கத்தோடு கூறினேன். அது நடிகர் விஜயை மனதில் வைத்து நான் கூறவில்லை என தனது விளக்கத்தை திருமாவளவன் முன் வைத்தார்.