திமுகவுக்காக குரல் கொடுக்கிறதா விசிக.? பரபரக்கும் தவெக அரசியல் களம்.!
தவெக மாநாட்டில் விஜய் பேசிய 'பாசிசம் - பாயாசம்', சிறுபான்மை - பெரும்பான்மை கருத்துகளுக்கு விசிக தலைவர்கள் தொடர்ந்து தங்கள் எதிர்வினையை ஆற்றி வருகின்றனர்.
சென்னை : கடந்த அக்டோபர் 27 அன்று விக்கிரவாண்டில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் தான் தற்போது வரையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக திமுக கூட்டணி வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பாசிசமா பாயாசமா.?
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என விசிக முன்வைத்த கோரிக்கையை மறைமுகமாக குறிப்பிட்டு விஜய் கூட்டணி பற்றியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விதத்திலும் பேசினார். மேலும், சிறுபான்மை – பெரும்பான்மை என பிளவுவாத அரசியல் பற்றிய தனது விமர்சனத்தை முன்வைத்தார். திமுகவை நேரடியாக குறிவைத்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த விஜய், பாஜகவை பாசிசம் என எதிர்க்கும் நீங்கள் என்ன பாயாசமா என கடுமையாக விமர்சித்தார்.
ஆதவ் அர்ஜுனா ஆதரவு :
ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு என்று விஜய் பேசிய கருத்தை ஆதரித்து விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவாக கருத்து தெரிவித்தாலும், அந்த கருத்தை ‘ஆஃபர்’ தருவது போல விஜய் பேசி வருகிறார் என விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
யாரை விமர்சிக்கிறார் விஜய்.?
மேலும், பாசிசத்தை எதிர்க்கும் நீங்கள் என்ன பாயாசமா என கேட்பதால், பாசிசத்தை எதிர்ப்பவர்களை விஜய் நையாண்டி செய்கிறார் என்றும், பாசிசத்தை எதிர்க்கும் திமுகவையா.? கம்யூனிஸ்ட் கட்சிகளையா.? காங்கிரஸையா.? பெரியார் அம்பேத்கர் இயக்கங்களையா யாரை எதிர்க்கிறர் விஜய்.? பெரும்பான்மை – சிறுபான்மை பற்றி தவறான புரிதலை விஜய் கொண்டுள்ளார் என்று அறிக்கை வாயிலாகவும்,
விஜய் உறுதியாக இல்லை.,
நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திருமாவளவன், “பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை. தன்னுடைய தோழமை யார் என காட்டாமல் தன்னுடைய எதிரி யார் என்பதை கட்டுவதிலேயே தான் விஜய் குறியாக இருந்துள்ளார். பிளவுவாத அரசியல் என பாஜகவை மறைமுகமாக விமர்சித்ததாக கூறப்பட்டாலும் , முதல் எதிரி யார் என கட்சி அமைப்பு என எதையும் விஜய் தெளிவாக கூறவில்லை. அதே போல பெரும்பான்மை பேசும் கட்சி பாஜக. சிறுபான்மையாக இருப்பவர்கள் நிலை பற்றி விஜய் தெரியாமல் பேசுகிறார்” என விமர்சனம் செய்தார் திருமா.
தவெக வாக்கு சதவீதம் என்ன.?
மேலும், விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில், ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையோடு நாங்கள் கூட்டணி பற்றி யாருடனும் வெளிப்படையாக பேசவில்லை. அப்படி பேசினாலும், திமுக , அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் பேசினால் தான் எங்களுக்கு பலன் கிடைக்கும். தன் பலம் என்னவென்றே தெரியாத, தனது கட்சி வாக்கு சதவீதம் அறியாத விஜய் எங்களோடு கூட்டணிக்கு வாருங்கள் என கூறுவதை ஏற்க முடியாது.
அவர்கள் முதலில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமிக்க வேண்டும். பூத் ஏஜென்ட்கள் நியமிக்க வேண்டும்.களத்தில் நின்று குறிப்பிட்ட வாக்கு சதவீதம் வாங்க வேண்டும். கடந்த 2024இல் பாஜகவை எதிர்த்து தேர்தலில் நின்றிருக்க வேண்டும். அதில் குறிப்பிட்ட வாக்கு சதவீதம் பெற வேண்டும். அதன்பிறகு 2026 தேர்தல் கூட்டணிக்கு எங்களிடம் இத்தனை வாக்கு சதவீதம் இருக்கு, நீங்கள் வந்தால் இத்தனை சதவீதம் வரும். இத்தனை இடங்களை பெறலாம் என்று கூட்டணி குறித்து பேச வேண்டும். இப்போதே அவர் பேசுவது நல்லதல்ல.
நாங்களும் பாசிசமா.?
விஜய் கட்சி தொடங்கிய போது வாழ்த்து தெரிவித்ததும் அடுத்து தொடர்பில் இருந்ததும் எங்கள் தலைவர் தான். ஆனால் அவர் கொள்கை பற்றி பேசிய போது தான் அதில் உள்ள முரண்பாட்டை சுட்டி காட்டினோம். பாசிசம் பாயசம் எல்லாம் ஒன்று தான் என பேசுவதால் திமுகவை விமர்சிக்கிறாரா. அப்படி என்றால் அதே பாசிசத்தை எதிர்த்து திமுகவோடு நிற்கும் எங்களையும் அவர் சேர்த்துதான் விமர்சிக்கிறார். நாங்களும் பாசிச கட்சி என்று விஜய் விமர்சிக்கிறாரா.?
கூட்டாஞ்சோறு தவெக :
பாசிசசத்தை எதிர்ப்பவர்களை நீங்கள் எதிர்த்தால் நீங்கள் இங்கு பாஜக கொள்கைகளை தானே பேசியிருக்க வேண்டும். அதனை விடுத்தது மீண்டும் பாசிசத்தை எதிர்த்த திராவிட கொள்கைகளை தான் முன்னிறுத்துகிறீர்கள். 75 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திமுக கருத்துக்களை மீண்டும் கூறி மீண்டும் ஒரு திமுகவை தொடங்கியுள்ளீர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய விசிக கருத்துக்களை மீண்டும் கூறி மீண்டும் ஒரு விசிக்கவை தொடங்கியுள்ளீர்கள். மீண்டும் ஒரு நாம் தமிழரை தொடங்கியுள்ளீர்கள், திமுக – விசிக – காங்கிரஸ் – நாம் தமிழர் ஆகிய கட்சி கொள்கைகளை கூட்டாஞ்சோறு போல கிண்டி கட்சி ஆரம்பித்து விட்டார் விஜய். திராவிட கொள்கையை மட்டுமே நம்பி விஜய் கட்சி தொடங்கியுள்ளார் என ஆளூர் ஷாநிவாஸ் கூறியுள்ளார்.
தவெக vs திமுக கூட்டணி :
திமுகவை நேரடியாக சுட்டிக்காட்டி தவெக தலைவர் விமர்சனம் செய்திருந்தாலும், அவர் பேசிய சில கருத்துக்கள் திமுக கூட்டணி கட்சிகளுக்குள் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. இதனால் சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் தற்போது தவெக – விசிக இடையிலான கருத்து முதலாகவே தென்படுகிறது. திமுகவுக்கு ஆதரவாக விசிக செயல்படுகிறது என்று தவெக சார்பிலும், தவெக கொள்கை முரண்பாடுகளை கொண்டுள்ளது என திமுக கூட்டணி கட்சிகள் மத்தியிலும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
அரசியல் களத்தில் இறங்கியுள்ளதால் விமர்சனங்கள் வரும் அதனை எதிர்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களை கடிதம் மூலம் அரசியல் களத்திற்கு தயார் படுத்திவருகிறார்.