ஆதவ் அர்ஜுனா 6 மாதம் சஸ்பெண்ட்! திருமாவளவன் அதிரடி நடவடிக்கை! 

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்கள் வரையில் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

Thirumavalavan - Aadhav Arjuna

சென்னை : கடந்த வெள்ளியன்று சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் உடன், விசிக துணை பொதுஇச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார் .

இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 2026இல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். யாரும் பிறப்பால் முதலமைச்சர் ஆக கூடாது என்று பேசியிருந்தார். விசிக கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு எதிராக அவர் கருத்து கூறியதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்தன. இதுகுறித்து உயர்மட்ட குழுவினர் உடன் ஆலோசனை எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, தற்போது திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆதவ் அர்ஜுனா கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி கட்சியில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அறிக்கை வாயிலாக திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

அதில், கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும், அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்