முதலமைச்சருடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு.!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் இன்று சென்னையில் உள்ள திமுக அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
சென்னை : விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது, தனது கட்சிக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “ஆட்சியிலும் பங்கு , அதிகாரத்திலும் பங்கு” என பேசியது, மதுரையில் விசிக கொடி கம்பம் அகற்றப்பட்டு பின்னர் அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் என விசிக – திமுக இடையே ஓர் விரிசல் போக்கு நிலவியதாக கூறப்பட்டது.
இப்படியான சூழலில் தான், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். இந்த சந்திப்பானது சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றுள்ளது .
முன்னதாக நேற்று கட்சி கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “தேர்தல் அரசியல் வேறு , மது ஒழிப்பு கோரிக்கை என்பது வேறு. நாங்கள் தற்போதும் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். மது ஒழிப்பு கோரிக்கைக்காக எந்த விளைவு வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம்” என பேசியிருந்தார்.
இந்த அரசியல் சூழலில், முதலமைச்சருடனான திருமாவளவனின் இந்த சந்திப்பு அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது . இந்த சந்திப்பில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுளளதாக கூறப்படுகிறது.