திமுக உடன் தான் கூட்டணி.! உறுதிப்படுத்திய திருமா., இன்று முதல்வருடன் சந்திப்பு.!

தேர்தல் அரசியல் வேறு, மது ஒழிப்பு கோரிக்கை வேறு,, தற்போது வரையில் விசிக , திமுக கூட்டணியில் தான் இருக்கிறது என அக்கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin

சென்னை : தற்போதைய தமிழக அரசியலில் தலைப்புச் செய்தியாக மாறி இருப்பது ‘விசிக – திமுக’ கூட்டணி தான்.  விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சி சார்பாக நடத்தவுள்ள மதுஒழிப்பு மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ளலாம், விருப்பம் இருந்தால் அதிமுகவும் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்து இருந்தார்.

திமுக கூட்டணியில் உள்ள விசிக, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது. திமுக – விசிக கூட்டணியில் விரிசல் என பலரும் பேசிக்கொண்டு இருக்க, மேலும் ஒரு சம்பவமாக ” ஆட்சியில் பங்கு ,  அதிகாரத்தில் பங்கு ” என திருமாவளவன் பேசிய வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் டெலிட் செய்யப்பட்டது .

இந்த வீடியோ விவகாரமும் பேசுபொருளாக மாறியது. ஆட்சியில் பங்கு கேட்டு திருமாவளவன் கோரிக்கை வைக்கிறார். பின்னர் திமுக அறிவுறுத்தலின் பெயரில் டிவீட் டெலிட் செய்யப்பட்டுவிட்டது என பல்வேறு கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் உலா வந்தன.

இந்த அரசியல் யூகங்களுக்கு பதில் சொல்லும் விதமாக நேற்று திருவாரூரில் நடைபெற்ற விசிக கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். அதில், ” தேர்தல் அரசியல் வேறு,  மது ஒழிப்பு கோரிக்கை என்பது வேறு, இது இரண்டையும் ஒன்றுபடுத்த வேண்டாம். தற்போதும் திமுக கூட்டணியில் தான் இருகிறோம். திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் என நம்புகிறோம்.

மற்றபடி, 100 விழுக்காடு, கண்ணீர் விட்டு கதறும் தாய்மார்களின் குரலாக மது ஒழிப்பு என்பதை விசிக வலியுறுத்தும். இந்த கோரிக்கையை திமுக, பாஜக,  அதிமுக என அனைவரும் ஒரே குரலாக வலியுறுத்தலாம். கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி பேசினால், திமுகவினர் நம்மை (விசிக) தப்பா நினைப்பார்கள். ஊடகங்கள் தவறாக சித்தரிக்கும் என்பதை தாண்டி,  மது ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தியதால் எந்த பாதிப்பு வந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். மது ஒழிப்பில் அரசியல் கணக்கு எல்லாம் கிடையாது. கூட்டணியில் பிரச்சனை வரலாம். திமுக மிரட்டியதால் பயந்துட்டான். டிவீட் டெலிட் செய்துவிட்டான் என சிலர் கூறுகிறார்கள். நம்மை பயமுறுத்தும் அளவுக்கு யாரும் இங்கேயில்லை.” என திருமாவளவன் பேசியிருந்தார்.

திமுக – விசிக கூட்டணி விவகாரத்தில் இப்படியான பேச்சுக்கள் அரசியல் களத்தில் எதிரொலித்து கொண்டிருக்கும் வேளையில், இன்று காலை 11 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திருமாவளவன் சந்திக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்