“மத்திய அரசின் இந்த முடிவு;தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் ஆபத்தான முயற்சி” – எம்பி திருமாவளவன் கண்டனம்…!

Default Image

கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை மத்திய அரசு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது. இதற்கு அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக்கழிவு மையத்தை அமைத்துக்கொள்ளும் முயற்சியைக் கைவிடவேண்டும் என்று எம்பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மனிதகுலத்துக்குப் மிகப்பெரும் தீங்கு:

“கூடங்குளம் அணுஉலை இயங்கும் அதே வளாகத்திற்குள் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்தை அமைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது மிகவும் ஆபத்தான ஒரு முடிவு. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக் கண்டிக்கிறது.

யுரேனியம், தோரியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்ற தாதுப்பொருள்கள் மின்சாரத்தை உற்பத்திச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் அணுவைப் பிளக்கும் போது வெளியாகும் அதீத வெப்பத்திலிருந்தே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் மின்னுற்பத்தியின் போது எஞ்சும் வேதிக் கழிவுதான் அணுக்கழிவாகும். அதுதான் மனிதகுலத்துக்குப் மிகப்பெரும் தீங்கை விளைவிக்கும் கதிர்வீச்சைக் கொண்டதாகும். அது பலநூறு கி.மீ சதுரப் பரப்பளவிற்கு நாற்திசைகளிலும், பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து பரவிப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். என்றேனும் எதிர்காலத்தில் எதிர்பாராவகையில் விபத்து நேர்ந்தால் அந்த இடத்தில் புல்பூண்டுகள் கூட முளைக்காமல் போகும் அளவுக்கு உயிரியப் பாதிப்பை உருவாக்கக்கூடியதாகும்.

உலகமே அதிர்ச்சி:

ஜப்பானில் ஃபுக்குஷிமா என்னுமிடத்தில் அணுஉலை அமைந்துள்ள வளாகத்திலேயே அணுக்கழிவு மையத்தையும் அமைத்ததால், திடுமென ஏற்பட்ட விபத்தில் அங்கே மிகப்பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது. அத்தகைய பாதிப்பு இனி உலகில் நிகழவேக்கூடாது என்பதுதான் மாந்தநேயமுள்ள ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாகும்.

இந்த அச்சம்தான் நம்மை ஆட்டிப்படைக்கிறது. கூடங்குளம் அணுஉலையே கூடாதென அத்தகைய படிப்பினைகளிலிருந்தே எச்சரித்தோம்; தொடர்ந்து எச்சரிக்கிறோம். ஆனால்,மத்திய அரசு, மக்களின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், ‘வளர்ச்சி’ எனும்பெயரில் இத்தகைய ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கேரளா, கர்நாடாகா உள்ளிட்ட பிறமாநிலங்களில் எழுந்த- எழுகிற எதிர்ப்புகளுக்கெல்லாம் மதிப்பளிக்கிற மத்திய அரசு, தமிழ்நாட்டில் என்னதான் மக்களின் எதிர்ப்பு இருந்தாலும் அதனைக் கண்டுகொள்ளாத போக்கேத் தொடர்கிறது.

நீதிமன்றத்திற்கு எதிரானது:

மக்களின் கடும் எதிர்ப்புக்கிடையிலும் முதல் இரண்டு அணு உலையைத் தொடங்கிய நிலையில், மேலும் மூன்றாவது நான்காவது உலைகளைத் தொடங்கியதுடன், அடுத்து இரண்டு உலைகளையும் தொடங்க எத்தனிக்கிறது.

இது தமிழ்நாட்டில் பேரச்சத்தை உருவாக்கிவரும் சூழலில் மேலும் கூடுதலாக ஒரு அணுக்கழிவு மையத்தை அந்த வளாகத்திற்குள்ளேயே அனுமதிப்பது கவலையளிக்கிறது. இந்த முடிவு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானதாகும்.

வழக்கு:

பூவுலகின் நண்பர்கள் எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், அணுஉலை இயங்கும் வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவைப் புதைக்கக் கூடாது என்பதுடன், ‘ஆழ்நில புதைப்பு’ ( Deep Geological Repository) முறையில் அணுக்கழிவு மையம் அமைத்திட வேண்டுமென கால அவகாசத்துடன் வழிகாட்டுதல் வழங்கியது.

அந்தக் காலக்கெடு முடிந்து 2022 வரையில் காலநீட்டிப்பும் கேட்டுப்பெற்றுள்ளனர். ‘ஏற்ற இடம் அமையவில்லை; பொருத்தமான தொழில்நுட்பம் இல்லை’ என்பன போன்ற காரணங்களால் உரியகாலத்தில் அதனைச் செய்ய இயலவில்லையென ஒப்புதல் வாக்குமூலம் அளித்தே இந்தக் கால அவகாசத்தை நீட்டித்துப்பெற்றுள்ளனர்.

தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் ஆபத்தான முயற்சி:

இந்நிலையில், அந்த வளாகத்திற்குள்ளேயே அதனை அமைக்க அனுமதித்திருப்பது; அதுவும் ஆழ்நில புதைப்பு முறையின்றி செய்ய ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் ஆபத்தான முயற்சி.

எனவே, இதனை மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த முயற்சியைக் கைவிடவேண்டுமெனவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி DGR முறையின்படி அணுக்கழிவைப் பாதுகாப்பாகப் புதைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அதுவரை தற்போதைய அணுஉலைகளை இயக்குவதை நிறுத்திவைக்க வேண்டுமெனவும் இந்திய மத்திய அரசை விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழ்நாடு அரசும் இதனை வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்”,என்று வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்