விசிக ‘மது ஒழிப்பு’ மாநாடு : எந்தெந்த கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.? முழு விவரம்…
இன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள விசிக 'மது ஒழிப்பு' மாநாட்டில் திமுக, காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக், மமக, தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
சென்னை : தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு இன்று மாலை 3 மணிக்கு உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்ததில் இருந்து மாநாடு குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்க தொடங்கிவிட்டன.
‘மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம்’ என்கிற திருமாவின் அழைப்பு திமுக கூட்டணிக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனை அடுத்து வந்த பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருமாவளவன் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு திமுக, விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்து கொள்ளும் என்ற அறிவிப்பு வெளியானது.
இதனை அடுத்து, தற்போது இன்று மாலை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் மாநாட்டில் எந்தெந்த கட்சி சார்பாக யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, திமுக சார்பில் அக்கட்சி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மேலும், அய்யா வைகுண்டர் இயக்கம் சார்பாக பால.பிரஜாபதி அடிகளார் , விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், விசிக எம்பி துரை.ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆனி ராஜா, காங்கிரஸ் சார்பாக அக்கட்சி எம்பி ஆர்.சுதா, மதிமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் ரொஹையா ஷேக் முகமது கலந்து கொள்கின்றனர்.
அடுத்ததாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாநில செயலாளர் பாத்திமா முசபர், மனிதநேய மக்கள் கட்சி மகளிர் அணி பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன் ஆகியோரும் இன்று பிற்பகல் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.