தவெக முதல் மாநாடு : உதயநிதி முதல் தமிழிசை வரை., தலைவர்களின் ரியாக்சன்..,
நேற்று விக்கிரவாண்டியில் தவெக தலைவர் விஜய் தலைமையில் முதல் அரசியல் மாநாடு நடைபெற்று முடிந்தது. இந்த மாநாடு பற்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்று முடிந்தது. சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். தனது கட்சியின் கொள்கைகள், செயல்திட்டடங்கள் , அரசியல் கருத்துக்கள் என முதல் அரசியல் மாநாட்டை நினைத்தபடி செயல்படுத்தியுள்ளார் விஜய்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தொடங்கி, பிளவுவாத அரசியல், ஊழல்வாத அரசியல் தனது எதிரிகள் என்றும், திராவிட மாடல் அரசு என மக்களை ஏமாற்றுகின்றனர் என நேரடி விமர்சனங்கள் வரை அவரது பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் நேற்று இரவு முதலே பற்றிகொண்டன. பலரும் விஜயின் பேச்சுகளுக்கு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
உதயநிதி ஸ்டாலின் (திமுக):
“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அப்படி பல கட்சிகள் உதயமாகியுள்ளன.ஆனால், மக்கள் ஆதரவைப் பெறுவது தான் முக்கியம். ஒரு தயாரிப்பாளராக நான் முதலில் தயாரித்ததே விஜய் படம் தான். அவர் எனக்கு நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். ” என மாநாட்டுக்கு முன்னர் பேசிய உதயநிதி , மாநாடு நடைபெற்ற பிறகு பேசுகையில், ” விஜய் பேசியதை நான் முழுதாக கேட்கவில்லை. அவர் பேசியதை கேட்டு விட்டு, பின்னர் பதில் அளிக்கிறேன். அவர் முழுதாக பேசியதை பார்த்த பிறகு தான், கருத்துக் கூற முடியும்.” என கூறினார்.
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) :
” முதல் மாநாட்டை விஜய் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். கடந்த 75 வருடத்தில் எந்த அரசியல் கட்சியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசியதில்லை. ஆனால், விஜய் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன் வைத்துள்ளார். இதனை தான் புதிய தமிழகம் கட்சி துவங்கியதில் இருந்து வலியுறுத்தி வருகிறது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் மாற்றத்தையும் நிகழ்த்தும் இது புதிய விடியலை உருவாக்கும்.” என அறிக்கை வெளியிட்டு விஜய் பேச்சுக்கு ஆதரவளித்துள்ளார்.
சீமான் (நாம் தமிழர்) :
” திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்கிறார் விஜய். தவெகவின் கொள்கை, கோட்பாடுகள் எங்களுடன் ஒத்துப்போகவில்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என தம்பி விஜய் கூறியது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது. 2026இலும் நாம் தமிழர் தனித்து போட்டி தான். பல தொகுதிகளில் இப்போதே வேட்பாளர்களை நியமித்து விட்டோம்.” என சீமான் கருத்து கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி (திமுக) :
” திமுக என்பது ஒரு ஆலமரம். காய்த்த மரம்தான் கல்லடி படும். யார் அரசியலுக்கு வந்தாலும் முதலில் திமுகவைத் தான் எதிர்ப்பார்கள். அப்படி விமர்சிப்பவர்களுக்கு நாங்கள் தக்க பதிலடியை கொடுப்போம்.” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழிசை (பாஜக) :
“உதயாவுக்கு எதிராக உதயமாகி இருக்கிறது. நல்ல சொற்பொழிவை ஆற்றினார். பிரிவினைவாதத்தை நாங்கள் பேசவில்லை. அவர் கூறுவதை பாஜக செய்து தான் வருகிறது. அதனை அவருக்கு புரிய வைப்பேன். திமுகவை அரசியல் எதிரி என கூறியதை நான் வரவேற்கிறேன். ஆளுநர் பதவி எதிர்ப்பு, இருமொழி கொள்கை ஏற்பு ஆகியவற்றை நான் எதிர்ப்பேன்” என தனது கருத்துக்களை அவர் கூறியுள்ளார்.