செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு புகார்கள்.. இதற்காக தான் கைது செய்தோம் – அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இவ்வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இன்று மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்கள் வைத்து வருகிறார்.
அமலாக்கத்துறை தரப்பு வாதத்தில், ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக கொடுக்கப்பட்டன. செந்தில் பாலாஜி தங்களை இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் தடுத்தார் எனவும் அமலாக்கத்துறை கடும் குற்றச்சாட்டை முன்வைத்தது.
செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பெற முயற்சித்த போது அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் தான் அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பார் என்ற சந்தேகத்திற்கு வலுவான காரணங்கள் இருந்ததாலும் கைது நடவடிக்கை மேற்கொண்டோம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்தது மற்றும் தற்பொழுது நீதிமன்ற காவலில் இருப்பது ஆகியவற்றை விசாரணை காலமாக கருதக் கூடாது. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.