வந்தே பாரத் ரயில் சேவைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும்..! முதல்வர் கோரிக்கை..!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை மோடி தொடங்கியுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை–கோவை வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் பிரதமர் மோடிக்கு விவேகானந்தரின் முழு உருவச்சிலையை ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகிகள் பரிசளித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தற்பொழுது, சென்னை பல்லாவரத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் ரூ.5200 கோடி மதிப்பில் திட்டங்களை தொடங்குவதற்கு நன்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை மோடி தொடங்கியுள்ளார்” என்று கூறினார்.
மேலும், சென்னை மற்றும் மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்றும் மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முன்னிலையில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.