தேசத்தை துண்டாட நினைப்பவர்களை பாஜக அரசு ஒருபோதும் விடாது.. வானதி சீனிவாசன்..

தேசத்தை துண்டாட நினைப்பவர்களை பாஜக அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. பிரிவினைவாதம் பேசுவது தான் கருத்துரிமையா?, திமுக பற்றி பெரியார் ஈ.வெ.ரா. பேசிய கருத்துக்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேச திமுக அரசு அனுமதிக்குமா? என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், மாநிலங்களவையில் திமுக எம்.பி. அப்துல்லா, உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.

மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும், எப்போதும், எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மாநிலங்களவையில் திமுக எம்பி அப்துல்லாவின் பேச்சு முழுக்க, முழுக்க உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

தேசத்தை துண்டாட வேண்டும் என்று வெவ்வேறு வார்த்தைகளில் அப்துல்லா பேசியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர், உச்ச நீதிமன்ற தீர்ப்பு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுகிறீர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவையை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள் எனக்கூறி அப்துல்லா பேசிய தேசவிரோதக் கருத்துக்களை நீக்கியிருக்கிறார்.

மிக்ஜாம் புயல் – தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்..!

பாரதம் சுதந்திரம் அடைந்த நாளை கருப்பு தினமாக அறிவித்த பெரியார் ஈ.வெ.ரா.வின் வழிவந்தவர்கள், அவரின் பிரிவினைவாத கருத்துக்களை ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை. அதனால்தான், அப்துல்லாவின் பிரிவினைவாத நச்சுக் கருத்துக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வக்காலத்து வாங்கியிருக்கிறார்.

பாரதம் என்பது ஒரே நாடு, அனைவரும் சமம்.  யாரும் உயர்ந்தவர்களும் இல்லை. தாழ்ந்தவர்களும் இல்லை என்பது தான் பாஜகவின் கொள்கை. இனம், மொழியின் பெயரால் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, இந்து மதத்தை தூற்றி, சிறுபான்மை மதத்தினரின் ஆதரவைப் பெற்று குடும்ப, ஊழல் ஆட்சி நடத்தி வரும் கட்சி திமுக.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுகவை துவங்கிய பிறகு திமுகவை பற்றி பெரியார் ஈ.வெ.ரா. பேசியவை பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. அவற்றை தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேச நான் தயாராக இருக்கிறேன். அதை அனுமதிக்க, அவைக் குறிப்பில் இடம்பெற அனுமதிப்பீர்களா என்று சவால் விடுக்கிறேன்.

தமிழ்நாடு மக்கள் உள்பட பாரத நாட்டு மக்கள் அனைவரும் பிரிவினைவாதத்தை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.  சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். தேசம் இல்லாவிட்டால் எதுவும் இல்லை. திமுக எம்.பி.யின் பிரிபினைவாத கருத்துக்களை, அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் ஏற்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் அப்துல்லாவின் பேச்சுக்கு குறைந்தபட்சம் கண்டனமாவது தெரிவிக்க வேண்டும். தேசத்தை துண்டாட நினைப்பவர்களை பாஜக அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்