“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதற்கு ஆதரவாக பேசிய திருமாவளவன் எங்களோடு போராட வேண்டும் என வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர் இன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி.செல்வம், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், எச்.ராஜா என பல்வேறு பாஜக மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிரான பாஜகவின் இந்த போராட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் முன்னர் ஆதரவு தெரிவித்து இருந்தார்.
திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” டாஸ்மாக்கிற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அதனை நாங்கள் வரவேற்போம். டாஸ்மாஸ் ஊழலுக்கு எதிராக பாஜகவினர் போராடுவதை நாங்கள் வரவேற்கிறோம். சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.” என்று தெரிவித்தள்ளார்.
மேலும், “மதுபான கடைகளை ஒழிக்க வேண்டும், அவைகள் மூடப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. கூட்டணிக்கட்சியாக இருந்தாலும் மது ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ” என திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இருந்தார்.
பாஜக முன்னெடுத்த இந்த போராட்டத்தை திருமாவளவன் ஆதரவு தெரிவித்த நிலையில் இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்று சென்னையில் டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக போராடிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளிக்கையில், ” விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவிக்க கூடாது. எங்களோடு சேர்ந்து போராட வேண்டும். தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால் இந்த போராட்டத்தை அவர்களும் முன்னெடுக்க வேண்டும்.” பேசியிருந்தார்.