திருப்பரங்குன்றம் விவகாரம் : “இந்து மத உணர்வுகளை திமுக அரசு புறக்கணிக்கிறது” ஆவேசமான வானதி!
மத சிறுபான்மை மக்களை மகிழ்ச்சியூட்ட இந்து மத மக்களை தொடர்ந்து புண்படுத்தும் செயலில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது என வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. மறுபுறம் இஸ்லாமிய மத தர்கா வழிபாட்டு தலமும் உள்ளது. அங்குள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் மாமிசம் சாப்பிட முயல்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் ‘மலையை காக்க வேண்டும்’ என இந்து அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்னதாக அறிவித்து இருந்தனர்.
முன்னதாக, இஸ்லாமியர்கள் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு நடத்த இருந்த கந்தூரி நிகழ்வை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இன்று போராட்டம் நடத்தப்போவதாக இந்து அமைப்பினர் கூறியிருந்ததால் பாதுகாப்பு கருதி நேற்று மற்றும் இன்றும் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
144 தடை உத்தரவை காரணம் காட்டி போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், கூட்டம் கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே இந்து முன்னணி அமைப்பினர் முக்கிய நிர்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலையை சுற்றி சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.
வானதி சீனிவாசன் பேட்டி :
இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், ” திருப்பரங்குன்றம் மலை பகுதியில் திட்டமிட்டு மத மோதலை உருவாக்குவதற்காக திமுகவினர் சிறுபான்மை மக்களை தாஜா செய்யும் அரசியலில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அந்தப்பகுதியை பதற்றமான பகுதியாக அரசே மாற்றி வருகிறது. திருப்பரங்குன்றம் புனிதமான மலை. முருகப்பெருமான் வீற்றிருக்கும் மலை. இடையில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வால் சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு சொந்தம் என கூறி, அங்கு இருக்கும் மத உணர்வுகர்களை மதிக்காமல், ஒரு சில விஷமிகள் திட்டமிட்டு மத ரீதியில் புண்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதற்கு இந்து முன்னணியினர், பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாளை நடைபெற இருந்த போராட்டம் 144 தடை காரணமாக அனுமதி இல்லை என அரசு கூறியிருக்கிறது. இது ஜனநாயக விரோத செயல். அங்குள்ள சமண குகைகள் பச்சை நிற பெயிண்ட் அடித்து அந்த இடங்களின் தன்மையை மற்ற சிலர் முயற்சிக்கின்றனர் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஜனநாயக விரோத போக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
நாளை (பிப்ரவரி 4) திருப்பரங்குன்றம் பகுதியில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் போராட்டம் நடத்தப்படும். மத சிறுபான்மை மக்களை மகிழ்ச்சியூட்ட இந்து மத மக்களை தொடர்ந்து புண்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் வீட்டு பெண்கள் கோயிலுக்கு செல்வது போல காட்டி இந்து மக்களுக்கு ஆதரவு போல ஒரு செயல் செய்து, மறுபக்கம் முழுவதுமாக இந்து மத மக்கள் உணர்வுகளை திமுக அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. ” என வானதி சீனிவாசன் திமுக அரசு மீது தனது கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.