இந்திய மதச்சார்பின்மைக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுகிறார்.! வைகோ கடும் கண்டனம்.!
அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டிய ஆளுநர், சனாதன தர்மம் பற்றி பேசுகிறார். மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநர் செய்கிறார் – வைகோ கடும் விமர்சனம்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு மேடைகளில் பேசும் கருத்துக்கள், அவரது செயல்பாடுகள் இந்திய மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி விமர்சித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
பல்வேறு காரணங்களால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டுமென குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலம் வலியுறுத்த, கையெழுத்திட வேண்டும் என ஆளும் திமுக மற்றும் கூட்டணி அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்தார்.
இதனை ஏற்று திமுக எம்.பி.க்கள் அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று கையெழுத்திட்டனர். அதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் வந்து கடிதத்தில் கையொப்பமிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “தமிழக ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார் . ‘ என குறிப்பிட்டார்.
இந்திய மதச்சார்பின்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் ஆளுநர், இந்தியா மதம் சார்ந்த நாடுதான் என்றும் குறிப்பிடுகிறார். ‘ என வைகோ குற்றம்சாட்டினார்.
அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டிய ஆளுநர், சனாதன தர்மம் பற்றி பேசுகிறார். மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநர் செய்கிறார் எனவும் வைகோ விமர்சித்துள்ளார்.
ஆளுநர், திருக்குறளை விமர்சிக்கிறார். திராவிட கலாச்சாரம் மற்றும் தமிழர் பெருமைகளை கொச்சைப்படுத்தி தொடர்ந்து பேசுகிறார். நடுநிலைமை தவறி, அரசியல் சார்ந்த- அதுவும் பாஜகவின் அரசியல் கருத்துக்களை பேசி தான் எடுத்துக்கொண்ட பதவி பிரமாணத்தை ஆளுநர் மீறிவிட்டார்.’ எனவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டார்.