வைக்கம் போரட்டம் நூற்றாண்டு; ஓராண்டு சிறப்பாக கொண்டாட முடிவு -முதல்வர் ஸ்டாலின்.!
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த நூற்றாண்டு மார்ச் 30,1924இல் நடந்த தீண்டாமைக்கு எதிரான வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு சிறப்பாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வைக்கம் போராட்டம் வெற்றி பெறக் காரணமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.
ஒடுக்கப்பட்டவர்களின் சமத்துவ உரிமைக்காக முதற்படியாக அமைந்த இந்த வைக்கம் போராட்டம், இந்தியாவின் அனைத்து கோயில் நுழைவு போராட்டங்களுக்கும் முன்னோடியாக அமைந்துள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஒன்றரை ஆண்டுகள் நடந்த இந்த வைக்கம் போராட்டம், நவம்பர் 23, 1925இல் முடிவுக்கு வந்தது, இத்தகைய சிறப்புவாய்ந்த போராட்டத்தின் சிறப்பை ஓராண்டு முழுவதும் அப்போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரியார் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும், சமூக நீதி நாளான செப்டம்பர்17இல் வைக்கம் விருதுகள் வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் மேலும் அறிவித்துள்ளார்.