தடுப்பூசியை இலவசமாக செலுத்த வேண்டும் – ஓபிஎஸ்
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே தடுப்பூசியை செலுத்த வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்.
முன்னெச்சரிக்கை தடுப்பூசியை இலவசமாக மக்களுக்கு செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கடந்த 10ம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்கு ஒரு கூடுதல் பாதுகாப்பினை தரும் வகையில் 2 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் 3வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்வதற்கான வசதி தனியார் தடுப்பூசி மையங்களில் இந்த மாதம் 10-ஆம் தேதி முதல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசிக்கான கட்டணம் சேவைக் கட்டணம் உட்பட 375 ரூபாய் அளவுக்கு இருக்கும் என்றும், இது தொடர்பான நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஓரளவு குறைந்து பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கட்டணம் மக்களுக்கு ஒரு கூடுதல் சுமையாக இருக்கிறது.
எனவே இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக செலுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவு வரும் நிலையில், முதலமைச்சர், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை இலவசமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செலுத்துவதற்குரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும், இல்லையெனில் மாநில அரசின் நிதியிலிருந்து முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக 3-ஆவது டோஸ் தடுப்பூசியை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே செலுத்த வேண்டும்.
– மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS அவர்கள்#COVID19 #AIADMK pic.twitter.com/zaeq13f8RJ
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) April 13, 2022