உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!
உசிலம்பட்டியில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 27ம் தேதி அன்று, பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றிருந்தார்.
அங்கு, கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்திருந்த பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்களுக்கு, காவலர் முத்துக்குமார் அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.
இந்த மோதலின்போது, பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் முத்துக்குமாரை கற்களால் தாக்கினர். இதில், தலையில் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த பயங்கர சம்பவம் உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியையும், காவல்துறையினரிடையே ஏற்படுத்தியது.
இதையடுத்து, முத்துக்குமாரின் படுகொலை தொடர்பாக உசிலம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொன்வண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பியோடிய நிலையில், அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணி தொடங்கியது.
பின்னர், பொன்வண்ணன் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உசிலம்பட்டி நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான காவல்துறை குழு அப்பகுதியை நோக்கி புறப்பட்டது. இன்று போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, பொன்வண்ணன் தப்பிக்க முயற்சித்ததாகவும், காவல்துறையினரை எதிர்த்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பொன்வண்ணன் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.