திருச்சி போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட கர்ப்பிணி உஷாவின் உடல் நல்லடக்கம் !
திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட கர்ப்பிணி உஷாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் ஹெல்மட் அணியவில்லை எனக்கூறி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் ராஜா- உஷா தம்பதியரின் இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்தார்.
இதில் கணவன் மனைவி இருவரும் நிலைத்தடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் மூன்று மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உடற்கூறாய்வு முடிந்தநிலையில் நேற்று கணவர் ராஜாவிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருச்சி கேகே நகரில் உள்ள வீட்டிற்கு உஷாவின் உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின்னர் இன்று காலை கிருஸ்துவ முறைப்படி உஷாவின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. காஜாமலை தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்ற பின் மேலப்புதூரில் உள்ள கல்லறையில் உஷாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.