அமெரிக்க அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்விக கிராமத்தில் சிறப்புப் பூஜை!
அமெரிக்கா தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு மன்னார்குடி அடுத்துள்ள கிராமத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு வலுவான ஆதரவு அமெரிக்காவில் இருந்து வருகிறது.
அமெரிக்காவையும் தாண்டி 13,000 கி.மீ தொலைவில் இருக்கும் திருவாரூரில் அமைந்துள்ள துளசேந்திரபுரம் எனும் கிராமம் வரை ஆதரவு பெருகி இருக்கிறது.
சிறப்புப் பூஜை :
அதற்கு, சான்றாக துளசேந்திரபுரம் கிராமத்து மக்கள் இன்று காலை நடைபெறும் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் எனக் கோவிலில் சிறப்புப் பூஜை நடத்தியுள்ளனர்.
இது இந்தியர்கள் உட்பட அமெரிக்க மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அவர் இங்குள்ள மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாது, இருந்தாலும் துளசேந்திரபுரம் மக்கள் அவர் வெற்றி பெற வேண்டும் எனச் சிறப்புப் பூஜை நடத்தியுள்ளனர்.
இது குறித்து அந்த கிராம மக்களிடம் கேட்ட போது அவர்கள் இது குறித்துப் பேசியது மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அக்கிரம மக்கள் கூறுகையில், “செவ்வாய்க்கிழமை காலை கமலா ஹாரிஸுக்கு சிறப்புப் பூஜை இங்கு நடைபெறுகிறது.
கண்டிப்பாக அவர் வெற்றிபெற்றால் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இங்கு இருக்கும். மேலும், அவர் அதிபராகத் தேர்வானால் அங்குள்ள இந்திய மக்களுக்கு அவர் நல்ல பணிகளைச் செய்வார்”, என அவர்கள் தெரிவித்தனர்.
கமலா ஹாரிஸும், துளசேந்திரபுரமும் :
நம் அனைவர்க்கும் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் ஒரு இந்திய வம்சாவளி என்று தெரியும். அவர் நம் திருவாரூர் துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் ஆவார். ஆங்கில அரசாங்கத்தில் கமலா ஹாரிஸின் தாத்தா பி.வி. கோபாலன் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார்.
ஜாம்பியா நாட்டுக்கு அகதிகளைக் கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் இவரது தாத்தாவான பி.வி.கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஜாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பி.வி கோபாலன் குடியேறி, அதன்பின் அமெரிக்காவில் குடியேறினார். இவரது தாத்தாவின் 2-வது மகள் சியாமளாவுக்கும், ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ்.
அமெரிக்காவில் பள்ளிப்படிப்பை முடித்த கமலா ஹாரிஸ் வழக்கறிஞராக பணியாற்றி பின் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் இவர் இருந்தாலும், இவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் அமைந்துள்ளது. இதனால், இன்றளவும் தமிழகத்தோடு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். மேலும், அதே கிராமத்தில் கமலா ஹாரிஸின் சொந்தம் பந்தம் ஒரு சிலர் வசித்து வருகின்றனர்.
இதனால், இன்று நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் அதிபராகத் தேர்வாவதற்கு துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வ கோவிலில் சிறப்புப் பூஜை நடத்தி, அக்கிரம மக்கள் வழிபட்டுள்ளனர். இப்படி கண்டம் விட்டு கண்டம் வரை ஆதரவு கிடைத்ததிற்கும் கமலா ஹாரிஸ் அதிபராக வெற்றி பெறுவாரா? என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.