டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – அமைச்சர் கே.என் நேரு
தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் அமைச்சர் கே.என் நேரு, தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் செப்டம்பர் 15க்குள் விடுபட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிருக்கு இடஒதுக்கீடு போன்றவற்றில் குற்றசாட்டு உள்ளது. இந்த குற்றசாட்டுகளை கலைந்து இந்தாண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்காளர் பட்டியல் சரிசெய்யும் பணி விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என 2 வகையான உள்ளாட்சி அமைப்புகளும், அவற்றில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகளும் உள்ளன. தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களுக்கு 2019 டிசம்பரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.