20% வரை தள்ளுபடி…70 புதிய கூட்டுறவுத் துறை மருந்தகங்கள் – திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Default Image

சென்னை:தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,தலைமைச்செயலகத்தில் இருந்து இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.

தமிழகத்தில் கிராமப் பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவுத்துறை இன்றியமையாப் பங்கினை ஆற்றி வருகின்றன.மிகப்பெரிய சமூகப் பொருளாதார இயக்கமான கூட்டுறவு இயக்கம், வறுமையை ஒழிக்கவும், சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது.

அந்த வகையில், கூட்டுறவுத் துறையின் 2021-22ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறை மூலம் 303 மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மருந்தகங்கள் நியாயவிலைக் கடைகள் போல வெளிச்சந்தைகளில் மருந்து பொருட்களின் விலைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் மிகவும் முக்கியமான சமூகப் பங்காற்றுகின்றன. இந்த எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 60 கடைகள் வீதம் மொத்தம் 600-ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி,கூட்டுறவுத் துறை சார்பில் தமிழகத்தின் சென்னை,திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (16.12.2021),காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.

இந்த கூட்டுறவு மருந்தகங்கள் இயங்கி வரும் பகுதிகளில் தனியார் மருந்து கடைகளும் போட்டியின் காரணமாக விலை குறைப்பு செய்து விற்பனை செய்து வருகின்றன.இதனால், கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்படும் மருந்தகங்களுக்கு பொது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தனியார் மருந்தகங்களுக்கு நிகராக புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருந்தகங்கள் சிறந்த பொலிவுடன் விளங்கிட, அவற்றில் கணினி மற்றும் குளிர்சாதன வசதிகள் உள்ளிட்ட போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருந்தகத்திலும் ஒரு மருந்தாளுநர் மற்றும் உதவியாளர் பணியில் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில்,கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின்,கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,திருமதி மு.அருணா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்