“பொள்ளாச்சி வழக்கு போல் இல்லை;இந்த வழக்கு இந்தியாவுக்கு உதாரணம்” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!
விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 22 வயது இளம்பெண்ணை திமுக பிரமுகர் ஹரிஹரன் என்பவர் காதலிப்பது போல் ஏமாற்றி அவருடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்தும் மிரட்டி வந்துள்ளார்.அதனை நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.
கூட்டு பாலியல் கொடுமை:
மேலும்,வீடியோவை வைத்து இந்த 7 பேரும் அந்த இளம்பெண்ணை மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.உடனே,மாடசாமி என்பவரிடம் உதவுமாறு அந்த பெண் கேட்ட நிலையில்,அந்த நபரும் அதே போல் இந்த பெண்ணை பாலியல் கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து,விருதுநகர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ஜூனைத் அகமது திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.
போலீசில் புகார்
இதுகுறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் அப்பெண் புகார் அளித்த நிலையில் திமுகவை சேர்ந்த 2 பேர், கூலித் தொழிலாளர்கள் 2 பேர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உரிய தண்டனை எடுக்கப்பட வேண்டுமென எம்.பி கனிமொழி,கமல்ஹாசன், பாமக நிறுவனர் ராமதாஸ் ,டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்:
மேலும்,விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பேரவையில் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.அப்போது,இந்த வழக்கை முறையாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினார்.
முதல்வர் அதிரடி பேச்சு:
இந்நிலையில்,ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இந்த வழக்கு விரைந்து தண்டனை கொடுக்கும் முன்னணி வழக்காக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு:
இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் கூறியதாவது:பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.மீதமுள்ள நான்கு பேர் சிறார் நீதிமன்ற கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக,இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி அவர்கள் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை- விரைந்து தண்டனை:
60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு,இந்த வழக்கு தனி நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.விரைந்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பாலியல் வழக்கை மாநில வழக்காக எடுத்து நேரடியாக கண்காணிக்குமாறு தமிழக காவல்துறை டிஜிபி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.நிச்சயம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு போன்று இல்லாமல்,வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வழக்கு போல் இல்லாமல் இந்த வழக்கு நிச்சயம் முறைப்படுத்தப்படும்.
ஒட்டுமொத்த இந்தியாவிற்கே உதாரணம்:
குறிப்பாக,ஒட்டுமொத்த இந்தியாவிற்கே உதாரணமாக இந்த வழக்கு விரைந்து தண்டனை கொடுக்கும் முன்னணி வழக்காக இருக்கும்.இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு இந்த வழக்கு பாடமாக இருக்கும்.பொறுத்திருந்து பாருங்கள்,சட்டப்பேரவையில் உள்ள அனைவருக்கும் இதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று உறுதியளித்துள்ளார்.